கும்பகோணத்தில் காவிரி பொங்கல் விழா

கும்பகோணம்: கும்பகோணத்தில் காவிரி பொங்கல் விழா நேற்று நடந்தது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு மூல ஆதாரமான காவிரிக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் கும்பகோணம் ராஜராஜேந்திரன் பேட்டை காவிரி படித்துறையில் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா நேற்று இரவு ராஜராஜேந்திரன் பேட்டை படித்துறையில் நடந்தது. சிறப்பு அர்ச்சனையை பேராசிரியர் சுசீத்ரா பார்த்தசாரதி தொடங்கி வைத்து பேசினார். ரமணி கோபாலன் குழுவினர் இறைவணக்கம் பாடினார். விருத்தாம்பாள் சந்திரமோகன் வரவேற்றார். விமலா தயாளன், தனலெட்சுமி முருகதாஸ், அருள்மொழி சாமிநாதன், லதா முருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பூஜையை தொடங்கி வைத்தனர்.

விழாவினை முன்னிட்டு சப்த கடஸ்தாபனங்கள் பூஜையில் அமர்த்துதல் நடைபெற்றது. அதன்பின்னர் உலக அமைதி வேண்டியும், மக்களின் வாழ்வாதாரங்கள் மேலோங்கவும், வற்றாத ஜீவ நதியாக காவிரி என்றென்றும் பெருக்கெடுத்து ஓடிடவும் காவிரி அன்னைக்கு சிறப்பு யாகமும், சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. இதனையடுத்து காவிரி அம்மனுக்கு பாலாபிஷேகம் ,மகாதீபாரதனை நடைபெற்றது. பின்னர் டாக்டர் ப்ரீத்தி சந்திரமோகன் தலைமையில் ஏராளமான பெண்கள் காவிரி ஆற்றில் தீபம் விட்டு காவிரிக்கு நன்றி தெரிவித்தனர்.முடிவில் சாவித்திரிசெல்வகணபதி நன்றி கூறினார். ராஜராஜேந்திரன் பேட்டை வழிபாட்டு குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: