27ல் வெறும் 6 விதிகளை மட்டுமே கையாண்டுள்ளது: பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்க எப்ஏடிஎப் திட்டம்

இஸ்லமாபாத்: பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி அளிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்க்க நிதி நடவடிக்கை பணிக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி அளிக்கப்படுவதை தடுக்க 27 அடிப்படை விதிகளை எப்ஏடிஎப் வகுத்துள்ளது. ஆனால் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டும், இந்த விதிகளின்படி நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தவறி விட்டது. 27ல் வெறும் 6  விதிகளை மட்டுமே பாகிஸ்தான் இதுவரை கையாண்டுள்ளது. இதனால் ஏற்கனவே பாகிஸ்தான் கிரே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக ஆலோசிப்பதற்காக பாரீசில் அடுத்த  மாதம் எப்ஏடிஎப்.,ன் கூட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக எப்ஏடிஎப்., கூறுகையில், ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளில் 5 பேர் மட்டுமே பாகிஸ்தானில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் லக்ஷர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ்  சையதும் ஒருவராக உள்ளார். பாகிஸ்தானில் இருந்து கிடைத்துள்ள தகவலின்படி, பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதில் தொடர்புடைய 900-க்கும் மேற்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் 750 பகல்ப் ஐ இன்ஸனியாத்  அமைப்புடனும், 150 ஜெய்சி இ முகம்மது அமைப்புடனும் தொடர்புடையவை ஆகும்.

ஆனால் இது பற்றி இதுவரை பாகிஸ்தான் தரப்பில் அதன் உரிமையாளர்கள் மீது எந்த நடவடிக்கையோ அல்லது வழக்குப்பதிவோ செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை கிரே பட்டியலில் எப்ஏடிஎப் சேர்த்து ஓராண்டு  ஆகும் நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பயங்கரவாதத்திற்கு நிதி அளித்ததாக 23 வழக்குகள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: