இலங்கையில் இருந்து கடத்தி வந்த 7 கிலோ தங்கம் நள்ளிரவு சிக்கியது: மானாமதுரை அருகே 7 பேர் கைது

ராமேஸ்வரம்,: இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள், ராமேஸ்வரம் கடலோரப் பகுதி வழியாக மதுரைக்கு கடத்தி செல்லப்படுவதாக தூத்துக்குடியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு நேற்று  முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து அன்றிரவில் ராமேஸ்வரம் - மதுரை இடையே மத்திய புலனாய்வு வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.நள்ளிரவு 2 மணி அளவில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை - திருப்புவனத்திற்கு இடையே உள்ள டோல்கேட் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காரில்  இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 7 கிலோ தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த புலனாய்வு துறையினர், காரில் இருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

Advertising
Advertising

அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வேதாளை பகுதியில் இருந்து தங்கத்தை கடத்தி வந்ததாகவும், 7 பேரும் சென்னை புதுப்பேட்டை, மதுரை கேகே நகர், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய  வந்தது. அவர்களை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு துறையினர், மதுரை மண்டல அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ₹1.70 கோடி. அதிகாரிகளின் தொடர் விசாரணையில், நான்கு நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து 20 கிலோ தங்கம் தமிழகத்திற்கு படகில் கடத்தி வரப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதிதான் தற்போது  பிடிபட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தினால், பதுக்கி வைக்கப்பட்டுள்ள மொத்த தங்கம் குறித்தும், தங்கம் கடத்தலில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பதும் தெரிய வரும்.

Related Stories: