குலசேகரன்பட்டினம் களைகட்டுகிறது: முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

உடன்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா, வருகிற 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் கொண்டாடப்படும். இந்தாண்டு தசரா திருவிழாவை முன்னிட்டு வருகிற 28ம் தேதி காலை 11 மணிக்கு காளிபூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம  அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, இரவு 7 மணிக்கு பக்தி இசை நடக்கிறது. 29ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதியுலா, 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7.45 மணிக்கு கொடியேற்றம், தொடர்ந்து  விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் திருக்காப்பு அணிதல் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.

விழா நாட்களில் தினமும் பரதநாட்டியம், சமயசொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.6ம் நாளான 4ம் தேதி இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 10ம் நாளான 8ம் தேதி காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணி முதல் அதிகாலை 3 மணி வரை  சிறப்பு பக்தி இன்னிசை, இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு  விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் வாகனத்தில் கடற்கரை சிதம்பேரஸ்வரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி ‘‘மகிஷாசூரனை சம்ஹாரம் செய்தல்’’  நடக்கிறது.

11ம் திருநாளன்று அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்ததும் கடற்கரை மேடைக்கு  அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனை, 2 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனை, 3 மணிக்கு  அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயில் அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனை முடிந்து திருத்தேரில் பவனி வந்து தேர் நிலையம் சென்றடைதல் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை வீதியுலா புறப்படுதல், மாலை 4 மணிக்கு அம்மன் கோயில் வந்து சேர்தல், மாலை 4.30 மணிக்கு காப்புகளைதல், நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம், 12ம் திருநாளான 10ம் தேதி காலை 6  மணி, 8 மணிக்கு அபிஷேக ஆராதனைகள், மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, செயல்அலுவலர் கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் செய்து வருகின்றனர்.

அதிகாரிகளின் ஈகோவால் கொடியேற்றத்தில் குழப்பம்

தசரா திருவிழா கொடியேற்றம் வழக்கமாக காலை 8.30 மணியளவில் நடைபெறும். ஆனால் இந்தாண்டு அதிகாலையில் கொடியேற்றம் நடைபெறுமென கோயில் நிர்வாகத்தினர் அறிவித்தனர். இதனால் பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. பிரசன்னம் பார்த்துதான் கொடியேற்ற நேரம் முடிவு செய்யப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறி வந்த நிலையில், நேர மாற்றத்துக்கு அறநிலையத்துறை உயரதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கொடியேற்ற நேரத்தை மாற்றக்கூடாது என்பதில் உயரதிகாரிகள் உறுதியாக இருந்ததால், அதிகாலை 5.45 மணிக்கு கொடியேற்றம் என திருவிழா அழைப்பிதழ் அச்சடித்தும் விநியோகம் செய்யப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.  இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு காலை 7.45 மணிக்கு கொடியேற்றம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட ஈகோ மோதலால் திருவிழாவிற்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா? என்ற சந்தேகம் பக்தர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Related Stories: