தாமிரபரணியில் புதைந்துள்ள புராதன கட்டிடங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் படையெடுப்பு

ஆறுமுகநேரி: தாமிரபரணி ஆற்றில் புதைந்துள்ள புராதன கட்டிடங்களை பார்க்க பள்ளி மாணவ, மாணவிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்த இடம் திருவிழா கூட்டம் போல் காட்சியளிக்கிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பெருமை சேர்ப்பது வற்றாத ஜீவநதி தாமிரபரணியாகும். இந்த நதி இரு மாவட்டங்களை வளப்படுத்தி விட்டு இறுதியில் தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலில் கடலில் கலக்கிறது. இத்தகைய பெருமை வாய்ந்த தாமிரபரணி ஆறு ஆத்தூர்-முக்காணி பாலத்திற்கு மேற்கு பகுதியில் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு கிடப்பதால் பழைமை வாய்ந்த கட்டிடங்கள் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து கடந்த 11ம்தேதி முதன் முதலாக தமிழ் முரசில் படத்துடன் செய்தி வெளியானது. அதன்பிறகு அந்த இடம் தற்போது சுற்றுலா தலம் போல் ஆகிவிட்டது. கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் பார்த்து சென்று உள்ளனர். தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த புராதன இடத்தை பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கிறார்கள். நேற்று முன்தினம் திருச்செந்தூர் சங்கரா மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளை 3 பஸ்களில் ஆசிரியர்கள் அழைத்து வந்தனர். அவர்கள் மண்ணில் புதைந்து போயிருந்த கல்வெட்டு சிற்பங்கள், கட்டிட பாகங்கள், கல் நங்கூரம் ஆகியவற்றை பார்த்து வியப்படைந்தனர். அவர்களுக்கு ஆத்தூர் சமூக ஆர்வலர் நெடுஞ்செழியபாண்டியன் விளக்கி கூறினார்.

இதுபோல் நேற்றும் அதே பள்ளியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர்கள் 175 பேர் 3 பஸ்களில் வந்து பார்த்து சென்றார்கள். இந்த மாணவர்கள் கூறும்போது, பாட புத்தகங்களில்தான் நாங்கள் கொற்கை வரலாற்றை படித்துள்ளோம். ஆனால் அவர்கள் ஆண்ட பகுதியை தற்போது பார்ப்பதால் எங்களுக்கு மனதில் நன்றாக பதிந்து விட்டது. எங்களுடன் வந்த ஆசிரியர்களும் மன்னர் காலத்து வரலாற்றை விளக்கி கூறினார்கள். இதுபோன்ற பழைமை வாய்ந்த இடங்களை பார்ப்பது எங்களுக்கு மிகுந்த சந்தோஷமாக உள்ளது என்றனர்.

இதுபோல் இன்று காலை ஆறுமுகநேரி சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 2 பஸ்சில் சென்று தாமிரபரணி ஆற்றில் புதைந்து கிடக்கும் கட்டிட பாகங்களை கண்டுகளித்தனர். அவர்களுடன் பள்ளி ஆசிரியர்களும் வந்திருந்தனர். மேலும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் தனிச்செயலாளரும் ஆறுமுகநேரியைச் சேர்ந்தவருமான சுந்தரேசன் இன்று மாலை அந்த இடத்தை பார்வையிடுகிறார். தினமும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கான பேர் இங்கு வந்து செல்வதால் அந்த இடம் ஒரு சுற்றுலா தலம் போல் மாறிவிட்டது. தற்போது வெளியில் தெரிவது 10 சதவீத கட்டிட பாகங்கள்தான். 90 சதவீதம் உள்ளே புதைந்து கிடக்கிறது. அதை தோண்டினால் இன்னும் பல அரிய தகவல்கள் கிடைக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.

Related Stories: