ஆந்திர சிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் நடிகை பானுப்பிரியா மீது வழக்கு: கைது செய்ய போலீசார் திட்டம்

சென்னை: தமிழில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் பானுப்பிரியா. சென்னை தி.நகரில் வசித்து வருகிறார். பானுப்பிரியா மற்றும் அவரது சகோதரர் இணைந்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர். அதில், ‘கடந்த 2018 பிப்ரவரி மாதம் ஆந்திராவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை தெரிந்தவர்கள் உதவியுடன் வீட்டில் வேலைக்கு சேர்த்தோம்.  பணிக்கு சேர்ந்த இரண்டு மாதத்தில் அவரது தாயார் பிரபாவதி சிறுமியை பார்க்க வீட்டிற்கு வந்து சென்றார். அதன்பிறகு எங்கள் வீட்டில் இருந்த 10 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம், ஒரு ஐபேட், ஒரு கேமரா, 2 வாட்ச் உள்ளிட்ட பொருட்களை காணவில்லை. எனவே, சிறுமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertising
Advertising

இதற்கிடையே, சிறுமியின் தாய் பிரபாவதி, நடிகை பானுப்பிரியா மற்றும் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தனது மகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் சமன் கோட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி ஆந்திர போலீசார் நடிகை பானுப்பிரியா, அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை வந்து பானுப்பிரியா வீட்டில் இருந்த சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பத்தில் சேர்த்தனர். தொடர்ந்து, பானுப்பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் பாண்டி பஜார் போலீசார் சிறுமியின் தாய் மீது ஜனவரி 30ம் தேதி இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரபாவதியை கைது செய்தனர்.

இந்நிலையில் குற்றம் நடந்த இடம் சென்னை என்பதால், ஆந்திர மாநிலம் கமன்கோட்டா காவல் நிலையத்தில் நடிகை பானுப்பிரியா மற்றும் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் மீது பதிவு ெசய்யப்பட்ட வழக்கை கமன்கோட்டா போலீசார், பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு மாற்றினர். அதைதொடர்ந்து பாண்டி பஜார் போலீசார் நடிகை பானுப்பிரியா மற்றும் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் மீது ஐபிசி 323, 506, 341, மற்றும் 75, 79 குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் என 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் நடிகை பானுப்பிரியா எந்த நேரத்திலும் கைது ெசய்யப்படலாம் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: