குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு: 22 பேர் கைது

குடியாத்தம்: குடியாத்தம் ரயில் நிலையத்தில் இருந்த இந்தி எழுத்துக்களை கருப்பு பெயின்ட் பூசி அழித்த இளைஞர்கள் 22 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ராஜ்பட்டி பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாஷ் என்பவர் தலைமையில் சுமார் 50 இளைஞர்கள் நேற்று பகல் 12 மணியளவில் குடியாத்தம் ரயில் நிலையத்துக்கு வந்தனர்.  தொடர்ந்து, அவர்கள் இந்தி திணிப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். பின்னர், அங்குள்ள பெயர் பலகை, விளம்பர பலகை மற்றும் ரயில் பெட்டிகளில் இருந்த இந்தி எழுத்துக்களை திடீரென கருப்பு பெயின்ட் பூசி அழித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போதும் இந்திமொழியை வெளியேற்றுவோம், தமிழ் மொழியை ஆதரிப்போம் என எழுதப்பட்ட தட்டிகளை ஏந்தியபடி கோஷமிட்டனர். தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஞானப்பிரகாஷ் உட்பட 22 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: