திருச்சி டவுன் பஸ்சில் டிக்கெட் கொடுக்க கண்டக்டர் வரவில்லை: பார்வையற்ற வாலிபருக்கு பேரம் பேசி அபராதம் விதித்த டிக்கெட் பரிசோதகர்: மனிதாபிமானம் எங்கே செல்கிறது?

* வைரலாகும் வீடியோ

* இரக்கமின்றி கொந்தளித்த அதிகாரிக்கு வலுக்கும் எதிர்ப்பு

திருச்சி: திருச்சியில் டவுன் பஸ்சில் பயணித்த பார்வையற்ற ஒருவருக்கு, டிக்கெட் பரிசோதகர் கறாராக அபராதம் விதித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்துக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் கண் பார்வை தெரியாத வாலிபர் ஒருவர் பயணித்தார். அவர் பயணம் செய்வதற்கான டிக்கெட் எடுக்கவில்லை. மேலும், அவரிடம் கண்பார்வையற்றோருக்கான பாசும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் பஸ்சில் ஏறிய டிக்கெட் பரிசோதகர், அவருக்கு ரூ500 அபராதம் விதிக்கப்படும் என கூறினார்.

அப்போது கண்பார்வையற்ற அந்த வாலிபர், ‘‘கண்டக்டர் டிக்கெட் வழங்க என் அருகிலேயே வரவில்லை. கண் தெரியாத நான் எப்படி எழுந்து சென்று டிக்கெட் வாங்க முடியும். என்னை உயர் அதிகாரியிடம் அழைத்து செல்லுங்கள். நான் அவரிடம் பேசி அபராதம் செலுத்துகிறேன்’’ என்றார். உடனே டிக்கெட் பரிசோதகர், ‘‘நான் தான் அதிகாரி, வேறு யார் வேண்டும்’’ என்று குரலை உயர்த்தி பேசினார். அப்போது அங்கு வந்த ஒருவர், கண்பார்வையற்ற ஒருவரிடம் இப்படி கறாராக அபராதம் வசூலிக்கலாமா என கேள்வி எழுப்பினார். உடனே அபராதத்தை ரூ100 ஆக டிக்கெட் பரிசோதகர் குறைத்தார்.

மேலும் பஸ்சில் இருந்தபடியே பெண் உயர் அதிகாரி ஒருவருக்கு போன் செய்து, ‘‘கண்பார்வையற்ற ஒருவர் பஸ்சில் பயணித்தார். அவரிடம் பாஸ் இல்லை. டிக்ெகட்டும் எடுக்கவில்லை. இதனால் ரூ100 அபராதம் விதித்துள்ளேன். இந்த அபராதம் போடலாமா’’ என்று டிக்கெட் பரிசோதகர் கேட்டார். எதிர்முனையில் பேசிய அந்த பெண் அதிகாரி, ‘‘என்ன ெசான்னார் என்று தெரியவில்லை. இதன்பின் ரூ100 அபராதத்துக்கான மெமோவை கண்பார்வையற்றவரிடம் டிக்கெட் பரிசோதகர் வழங்கினார். நான் கோர்ட்டில் அபராதத்தை செலுத்தி விடுகிறேன்’’ என்று கூறி கண்பார்வையற்றவர் சென்றார்.

இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிலர் கூறுகையில், ‘‘டிக்கெட் எடுக்காமல் பஸ்சில் பயணம் செய்வது சட்டப்படி தவறுதான். ஆனால் பயணிகளை தேடிச்சென்று டிக்கெட் வழங்க வேண்டியது கண்டக்டர்களின் கடமை. கண்பார்வையற்ற ஒருவர் கண்டக்டரை தேடி வந்து டிக்கெட் வாங்குவது எப்படி சாத்தியமாகும். டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது தவறு என்று தெரிந்தும், பலர் அந்த தவறை செய்கிறார்கள். அவர்களையெல்லாம் பிடிக்காமல் விட்டு விட்டு, கண்பார்வையற்ற ஒருவரிடம், இப்படி கறாராக அபராதம் வசூலிப்பது முறையா.

சட்டம் அனைவருக்கும் சமம் என்றாலும், முதலில் ரூ500 அபராதம் என்று கூறி விட்டு, பின்னர் அதை ₹100 ஆக குறைத்தது ஏன். அபராதத்தை தங்கள் இஷ்டத்துக்கு அதிகாரிகள் வசூலிக்கலாமா என ஆதங்கத்துடன் கூறினர். டிக்கெட் பரிசோதகர் மிரட்டும் தொணியில் பேசுவது, அதற்கு பார்வையற்றவர் விளக்கம் அளிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: