கர்நாடகாவில் ஆளில்லா உளவு விமானம் சோதனையின் போது கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு

சித்ரதுர்கா: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய ஆளில்லா ட்ரோன் விமானம் இன்று காலை சோதனையின் போது விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஜோடி சிக்கனஹள்ளி என்ற கிராமத்தில் ஆளில்லா உளவு விமானம் விழுந்து நொறுங்கியது. இந்திய ராணுவத்திற்காக டி.ஆர்.டி.ஓ நிறுவனம் ரஸ்டோம்- 2 என்ற ஆளில்லா உளவு விமானத்தை உருவாக்கி சோதித்து வந்தது. ஆளில்லா உளவு விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடத்துக்கு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர். இந்த விபத்து காலை 6 மணிக்கு நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் கீழே விழுந்து நொறுங்கியபோது பயங்கர சத்தம் ஏற்பட்டதால் அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் பெரும் அதிச்சியடைந்தனர்.

மேலும், விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விமானம் விவசாய நிலத்தில் விழுந்ததால் யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து நடந்த இடத்திற்கு டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் விரைந்துள்ளனர். டிஆர்டிஓ நிறுவனம் தயாரித்து வரும் விமானங்களின் சோதனையை அதன் சித்ரதுர்கா மாவட்ட தலைமையகத்திற்கு மிக அருகில் மேற்கொண்டு வருவது வழக்கம். ஆளில்லா விமானங்கள் மற்றும் விமானங்களுக்காக சல்லகேர் ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்ச் (ஏடிஆர்) என்ற சொல்லப்படும் சோதனை பயிற்சிகள் டிஆர்டிஓ நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்து நடந்த இடத்தில் விவசாயிகள் பொதுமக்கள் என கூட்டம் குவித்து காணப்பட்டது.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த சித்ரதுர்கா மாவட்ட எஸ்.பி கூறுகையில், டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் ரஸ்டோம்- 2 என்ற ஆளில்லா ட்ரோன் விமானத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. இந்த சோதனை தோல்வியடைந்ததால் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. மேலும் விவசாய நிலம் என்பதால் பொதுமக்கள் யாருக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழவில்லை என தெரிவித்தார். தற்போது, விபத்து நடந்த பகுதியை சுற்றி பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், நொறுங்கிய விமானத்தை காண பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான ட்ரோன் விமானத்தின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories: