தேச பக்தி குறித்த பாட திட்டம் வடிவமைக்க புதிய குழு அமைப்பு : துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தகவல்

புதுடெல்லி: தேச பக்தி குறித்த பாடத் திட்டத்தை உருவாக்க ஐவர் குழு  அமைக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மணிஷ் சிசோடியா  தெரிவித்துள்ளார். தேச பக்தி குறித்து பல்வேறு வகையில்  பேசப்படுகிறது. உண்மையான தேச பக்தி என்ன என்பது புரிபடாத விஷயமாக உள்ளது.  பாரத் மாதா கீ ஜெய் , வந்தே மாதரம் சொல்ல வேண்டும். இல்லையென்றால் தேச  பக்தி இல்லை என்ற நிலை நாட்டில் உள்ளது. விரைவில் மாநில சட்டப் பேரவை  தேர்தல் நடைபெற உள்ளது. பாஜவின் தேசப் பற்று நிலைப்பாட்டை ஆம் ஆத்மி கையில் எடுத்துள்ளது. இந்நிலையில்,  பள்ளிகளில் மாணவர்களுக்கு  உண்மையான தேச பக்தியை ஊட்டும் வகையில் பாடத் திட்டத்தை வடிவமைக்க ஆம் ஆத்மி  அரசு முடிவெடுத்துள்ளது. தேசிய பாடத் திட்டத்தை மீள்வடிமைக்கவே ஐந்து பேர்  கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து துணை முதல்வரும், கல்வி  அமைச்சருமான மணிஷ் சிசோடியா கூறியதாவது: இப்போது தேசப் பற்று என்பது பாரத்  மாதா கீ ஜெய் என்பதுதான். தினமும் நாட்டு மக்களுக்கு நமது அர்ப்பணிப்பை  செய்யவேண்டும்.

இதை மாணவர்களுக்கு கற்று தர வேண்டும். இதுதான் தேசப் பற்று  ஆகும். முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மாதம் தமது அரசு தேசப்பக்தி குறித்த  பாடத் திட்டத்தை அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல்  அறிமுகம் செய்ய  உள்ளதாக அறிவித்தார். இது முதல்தர தேசியவாதிகளை உருவாக்கும்.  எங்களது  தேசப்பக்திக்கான விளக்கம் வித்தியமாசமானது. பாரத் மாதா கீ ஜெய் சொல்வது  மட்டும் தேசப் பக்தி ஆகாது. நாட்டுக்கு கொஞ்சமாவது நாம் எதையாவது செய்ய  வேண்டும். சிவப்பு விளக்கு சிக்னலை யாராவது மீறினால், அல்லது லஞ்சம்  கொடுத்தால் அவர் நாட்டை ஏமாற்றுகிறார் என்பது பொருள்.

இதைத்தான் புதிய  பாடத் திட்டத்தில் கூற உள்ளோம். புதிய பாடத் திட்டத்தை உருவாக்க ஐவர்  அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சிஇஆர்டி, கல்வி நிபுணர்கள்,  ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஏற்கெனவே வரைவு பாடத் திட்டத்தை  உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நான் தேசப் பக்தி பாடத்திட்டம்  என்றவுடன், பலரும் இது பாஜவின் கொள்கை. உங்களது கிடையாது என்றனர். தேசப்பக்திக்கு யாராவது சொந்தம் கொண்டாட முடியுமா? இது குறித்து நீண்ட  ஆலோசனை நடத்தினோம். தேசப் பக்தி என்றவுடன் தவறான கண்ணோட்டம் ஏற்படுகிறது. சட்டப் பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு  செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: