பெங்களூரு மாநகராட்சி புதிய மேயர் யார்? பாஜ மூத்த கவுன்சிலர்கள் கடும் போட்டி : பதவியை கைப்பற்ற காட்பாதர்கள் மூலம் லாபி

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சிக்கு புதிய மேயர் மற்றும் துணைமேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறும் நிலையில் பாஜவில் மூத்த கவுன்சிலர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பதவியை கைப்பற்ற தங்கள் காட்பாதர்கள் மூலம் லாபி நடத்தி வருகிறார்கள். பெங்களூரு மாநகராட்சிக்கு கடந்த 2015ல் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பாஜ அதிக வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தாலும், நிர்வாகம் செய்ய  தேவையான பலமில்லாததால், மேயர் பதவியை பிடிக்க முயற்சிக்கவில்லை. அதை தொடர்ந்து காங்கிரஸ்-மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து நிர்வாகத்தை பிடித்தன. முதல் சுற்றில் மேயராக மஞ்சுநாத்ரெட்டியும், துணைமேயராக ஹேமாவதியும் பதவி வகித்தனர். இரண்டாவது சுற்றில் மேயராக ஜி.பத்மாவதியும், துணைமேயராக ஆனந்தும் இருந்தனர். மூன்றாவது சுற்றில் மேயராக ஆர்.சம்பத்ராஜுவும், துணைமேயராக பத்மாவதியும் இருந்தனர். நான்காவது சுற்றில் மேயராக கங்காபிகேவும், துணைமேயராக பத்ரேகவுடாவும் உள்ளனர்.

இவர்களின் பதவி காலம் இம்மாதம் 28ம் தேதியுடன் முடிகிறது. மாநகராட்சியின் ஐந்தாவது சுற்றுக்கு இம்மாதம் 28ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அன்று மகாளய அமாவாசை என்பதால் அரசு விடுமுறை. எனவே அதற்கு ஒரு நாள் முன்னதாக வரும் 27ம் தேதி தேர்தல் நடத்த மண்டல ஆணையர் முடிவு செய்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அன்று காலை 9 மணிக்கு தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். 10.30 மணிக்கு மனுக்கள் மீது பரிசீலனை நடக்கிறது. போட்டி இருக்கும் பட்சத்தில் காலை 11.30 மணிக்கு தேர்தல் நடத்தப்

படும். தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த நான்கு சுற்று தேர்தலில் காங்கிரஸ்-மஜத கூட்டணி நிர்வாகத்தை பிடித்திருந்தது. கடைசி சுற்றில் இரு கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் நிர்வாகத்தை பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உள்பட்ட 5 பேரவை தொகுதி உறுப்பினர்கள் கட்சி தாவல் தடை சட்டத்தால் பதவி இழந்துள்ளதால் தற்போது ஆளும் காங்கிரஸ்-மஜத கூட்டணி பலம் குறைந்துள்ளது.

இதன் காரணமாக பாஜ நிர்வாகத்தை பிடிப்பதற்கான ஏற்ற சூழல் உருவாகியுள்ளது. கடைசி சுற்று நிர்வாகம் என்பதால் பாஜவில் உள்ள மூத்த கவுன்சிலர்கள் பதவியை பிடிப்பதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இம்முறை சுழற்சி அடிப்படையில் மேயர் மற்றும் துணைமேயர் பதவிகள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேயர் பதவியை பிடிக்க எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி, மூத்த பாஜ கவுன்சிலர்கள் உமேஷ்ரெட்டி, கவுதம், முனியேந்திரா ஆகியோர் முயற்சித்து வருகிறார்கள். தங்கள் ஆதரவு காட்பாதர்கள் மூலம் லாபி தொடங்கியுள்ளனர். நான்காண்டுகள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில் இருந்த பாஜவுக்கு தற்போது மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ளது. மற்றும் காங்கிரஸ், மஜத கட்சிகளை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் பதவி இழந்துள்ளதின் மூலம் வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதை பயன்படுத்தி மேயராக வேண்டும் என்ற தீவிர முயற்சியில் சீனியர் கவுன்சிலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories: