ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் கோட்டை அகழியில் நவீன மிதவை இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் தொடக்கம்

வேலூர்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் கோட்டை அகழியில் நவீன மிதவை இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் நேற்று தொடங்கியது. நாட்டில் உள்ள தரைக்கோட்டைகளில் இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கும் கோட்டையாக வேலூர் கோட்டை விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோட்டையில் பல்வேறு கலை சிற்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. இப்படிப்பட்ட இந்த கோட்டையை மேலும் அழகுறச்செய்வது, அகழி தான். இந்த அகழியினை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.32 கோடி மதிப்பீட்டில் வேலூர் கோட்டையை அழகுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதில் முதல்கட்டமாக கோட்டை அகழியை தூர்வாரும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது அகழியில் தண்ணீர் உள்ள பகுதிகளை தூர்வார கடந்த வாரம் 4 நவீன மிதவை இயந்திரங்கள் வேலூர் கோட்டைக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த இயந்திரங்கள் கொண்டு கடந்த திங்கட்கிழமையன்று தூர்வாரும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தூர்வாரும் பணிகள் தொடங்கவில்லை. இந்நிலையில் நேற்று ஒரே ஒரு நவீன மிதவை இயந்திரம் மட்டும் அகழியில் இறக்கி வைக்கப்பட்டது. அதன்மீது கீரேன் ஒன்று இறக்கி விடப்பட்டு, சங்கிலியால் கட்டப்பட்டது. பின்னர் அகழியில் தூர்வாரும் பணிகள் தொடங்கியது. இன்று மற்ற 3 மிதவை இயந்திரங்கள் அகழியில் இறக்கிவிடப்பட்டு தூர்வாரும் பணிகள் தீவரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கோட்டை அகழி தூர்வாரும் பணிகள் தொடங்கியதைப் பார்த்து, சுற்றுலாப்பயணிகள், இப்போதே படகு சவாரி செல்ல வேண்டும் என்ற ஆவல் வந்துள்ளதாக கூறி மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில் பல கோடி செலவு செய்து அகழியை தூர்வாரும் பணிகளை ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: