பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: அரசுக்கு குமரி அனந்தன் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரி அனந்தன் வலியுறுத்தியுள்ளார்.  காந்தி பேரவை சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் தலைமையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். மேலும், போராட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், விசிக தலைவர் திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சேம.நாராயணன், பி.ஆர்.பாண்டியன், எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து குமரி அனந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:அண்ணா முதல்வராக இருந்த போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். தமிழகத்தில் மட்டும் இல்லாமல் எந்த ஒரு மாநிலத்திலும் மதுவிலக்கு கோரி போராட்டங்கள் நடந்தாலும் அதற்கு ஆதரவாக தன்னுடைய முதல் குரலை எழுப்பினார்.

தற்போது தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு பூரண மதுவிலக்கு குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருந்தாலும் அண்ணாவின் பெயரில் உள்ள  கட்சியாக இருப்பதால் ஆளும் அதிமுக அரசு பூரண மதுவிலக்கை கொண்டுவர நிச்சயம் ஒரு முடிவு எடுக்க வேண்டும். இதற்காகவே, அண்ணாவின் பிறந்த நாளில்  நாங்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறோம். இவ்வாறு கூறினார்.

Related Stories: