பொருளாதார மந்தநிலை பற்றி அமைச்சர்கள் கருத்து கிரிக்கெட்டை உதாரணம் காட்டி டிவிட்டரில் பிரியங்கா கிண்டல்

புதுடெல்லி: பொருளாதார மந்தநிலை குறித்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் ஆகியோர் கூறிய கருத்துகளுக்கு, கிரிக்கெட் விளையாட்டு மூலமாக கிண்டலடித்துள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா. சமீபத்தில் சென்னையில் பேட்டி அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சிக்கு ஓலா, உபெர் போன்ற கால்டாக்சி நிறுவனங்களே காரணம் என்றார். இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இதைத் தொடர்ந்து, மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் பேசுகையில், ‘‘நாட்டின் பொருளாதாரம் ரூ.5 லட்சம் கோடி டாலர் இலக்கை நிச்சயம் எட்டும். இதுபற்றி தொலைக்காட்சிகளில் காட்டப்படும் கணக்குகளை நம்ப வேண்டாம். அந்த கணக்குகள் எல்லாம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க உதவவில்லை’’ என்றார். புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தது ஐசக் நியூட்டன் என்பதற்கு பதிலாக ஐன்ஸ்டீன் என அவர் தவறாக கூறியதையும் சமூக வலைதளங்களில் பலர் கிண்டலடித்தனர். இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘கேட்ச் பிடிக்க வேண்டுமென்றால், பந்தை குறி பார்க்க வேண்டும். அதுதான் உண்மையான விளையாட்டு ஆர்வம். இல்லாவிட்டால், நீங்கள் புவி ஈர்ப்பு, கணக்கு, ஓலா, உபெர் மீது பழி சுமத்திக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்,’ என தன் பங்குக்கு கிண்டலடித்துள்ளார். மேலும், கிரிக்கெட்டில் பவுண்டரி எல்லை அருகே வீரர் ஒருவர் கடினமான கேட்ச் ஒன்றை லாவகமாக பிடிக்கும் வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories: