புளோரிடா மாகாணத்தில் மாவட்ட நீதிபதியாக இந்தியர் நியமனம்

வாஷிங்டன்:  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தெற்கு மாவட்ட நீதிபதியாக இருப்பவர் ஜேம்ஸ் ஐ கோஹன். இவரது பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த அனுராக் சிங்காலை இந்த பதவிக்கு நியமித்து அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இவர் உள்பட 17 நீதிபதிகளை நியமனம் செய்து வெள்ளை மாளிகை அனுப்பியுள்ள பரிந்துரை செனட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செனட்டின் நீதிபதிகள் குழு விசாரணை நடத்தி 17 நீதிபதிகளின் நியமனத்தை இன்று உறுதி செய்யும். அனுராக்கின் நியமனத்தை செனட் உறுதி செய்தால், புளோரிடாவில் மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்யப்படும் முதல் இந்திய வம்சாவளி நீதிபதி என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்.

கடந்த 2011ம் ஆண்டு முதல் புளோரிடா 17வது சர்க்கியூட் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் சிங்கால், டெக்ஸாசின் ரைஸ் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு படித்தவர். வேக் பாரஸ்ட் பல்கலையில் சட்டம் படித்தவர். கடந்த 1960ம் ஆண்டில் இவரது பெற்றோர் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். இவரது தந்தை உத்தர பிரதேசத்தின் அலிகாரை சேர்ந்த விஞ்ஞானி. தாயார் டேராடூனை சேர்ந்தவர்.

‘தலிபான்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை செத்து விட்டது’

ஆப்கானிஸ்தான் நாட்டில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பதற்காக அந்த நாட்டு படையுடன் இணைந்து அமெரிக்க படையும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தலிபான்கள் மற்றும் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனியுடன் வாஷிங்டன் அருகேயுள்ள கேம்ப் டேவிட்டில்   ரகசிய சமாதான பேச்சு வார்த்தையை நடத்த அமெரிக்கா கடந்த வாரம் திட்ட மிட்டிருந்தது. அப்போது காபூலில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உள்பட பலர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தலிபான்கள் நடத்திய இந்த தாக்குதலால் ஆத்திரமடைந்த டிரம்ப் அந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்தார். இது தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் நிருபர்களிடம் கூறுகையில், ‘`தலிபான்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை செத்து விட்டது. நாங்கள் ஆப்கனில் இருந்து சரியான நேரத்தில் வெளியேறுவோம் எதிர்காலத்தில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக நாங்கள் எந்த பரிசீலனையும் செய்யவில்லை,’’ என்றார்.

Related Stories: