திண்டிவனம் அருகே பரபரப்பு: சாமி ஊர்வலத்தில் தகராறு இருபிரிவினர் பயங்கர மோதல்.. கரும்பு தோட்டம் தீ வைத்து எரிப்பு

விக்கிரவாண்டி: திண்டிவனம் அருகே சாமி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்தது தொடர்பாக இருபிரிவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் கரும்பு தோட்டம் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பொம்பூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் கூழ்வார்த்தல் திருவிழாவையொட்டி நேற்றிரவு சாமி வீதி உலா நடைபெற்றது.

அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே சாமி வீதி உலா சென்றபோது, பட்டாசு வெடித்துள்ளனர். இந்நிலையில் அங்கு பட்டாசு வெடிப்பதற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆண்டுதோறும் செய்வது போல் இல்லாமல், இந்தாண்டு ஏன் பஸ் நிறுத்தம் வரை வந்து பட்டாசு வெடிக்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.அப்போது இருபிரிவினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் கல்வீசி தாக்கி கொண்டனர். மேலும் அருகில் இருந்த ரமேஷ் என்பவர் கரும்பு தோட்டத்துக்கு தீ வைக்கப்பட்டதில் சுமார் ஒன்றரை ஏக்கர் கரும்பு தீயில் எரிந்து நாசமானது.

தீயை அணைக்க முயன்ற மயிலம் சப்-இன்ஸ்பெக்டர் சையத் முகமது அலி லேசான தீக்காயம் அடைந்தார். இச்சம்பவத்தால் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோதலையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கோயில் திருவிழாவில் இதுபிரிவினர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: