தலிபான்களுடன் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்ட டிரம்பிற்கு அவரது கட்சியினரே எதிர்ப்பு

வாஷிங்டன்: தலிபான்களுடன் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்ட அந்நாட்டு அதிபர் டிரம்பிற்கு அவரது கட்சியினரே கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் தலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அரசு ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் காபூலில் கடந்த வாரத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் ஒரு அமெரிக்க வீரர் உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்ற நிலையில் அந்த பயங்கரவாத இயக்கத்துடனான பேச்சுவார்த்தை கைவிடப்படுவதாகவும் அமெரிக்காவின் மேரி லேண்ட் மாகாணத்தில் உள்ள அதிபர் மாளிகையான கேம்ப் டேவிட்டில் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து அமெரிக்கர்கள் மீதே தாக்குதல் நடத்தும் தலிபான்களை அமெரிக்க மண்ணுக்கே அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடுவதா என்று டிரம்பிற்கு அவரது சொந்த கட்சியினரே கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லீஸ் செனி தலிபான்கள் யாரும் அமெரிக்காவில் காலடி வைக்க அனுமதிக்க கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ ஆப்கனிஸ்தான் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் தனிப்பட்ட முறையில் டிரம்ப் ஈடுபாடு காட்டியதே கேம்ப் டேவிட்டின் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததற்கு காரணம் என தெரிவித்துள்ளார். தலிபான்களுடன் நேருக்கு நேர் பார்த்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வை எட்ட முடியுமா? என பார்க்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்ததாகவும் மைக் போம்பியோ கூறியுள்ளார்.

Related Stories: