மணிப்பூரிலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டு முறையை கொண்டுவர அம்மாநில முதலமைச்சர் மத்திய அரசுக்கு கோரிக்கை

மணிப்பூர்: அசாம் மாநிலத்தை போல தேசிய குடிமக்கள் பதிவேட்டு நடைமுறையை மணிப்பூர் மாநிலத்திலும் கொண்டு வர வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் பிரேன்சிங் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அசாம் மாநிலத்தில் வாழும் இந்திய குடிமக்களை கண்டறியவும் வேற்றுநாட்டு குடிமக்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களை கண்டறிந்து வெளியேற்றவும் தேசிய பதிவேட்டு நடைமுறை உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் அசாம் தலைநகர் கௌஹாத்தியில் வடகிழக்கு ஜனநாயக கூட்டணி மாநாட்டிற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திற்குமே தேசிய குடிமக்கள் பதிவேட்டு முறை தேவை என்று தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் மணிப்பூர் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

1971ம் ஆண்டு வங்கதேச விடுதலை போரின் போது ஏராளமான மக்கள் அங்கிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தனர். இதனை தொடர்ந்து வங்கதேசத்தில் இருந்து குடிபெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்ததால் தங்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக அசாம் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி 2013ம் ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி தொடங்கியது. 1971ம் ஆண்டு மார்ச் 24-கிற்கு முன்னர் இந்தியாவில் வசித்தவர்களும் அவர்களின் வாரிசுகள் மட்டுமே இடம்பெறும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில் வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்களை சேர்த்து கடந்த 31ம் தேதி தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டது.

Related Stories: