கடைசியாக கையெழுத்து போட்டதால் கைதா? : ப.சிதம்பரம் டிவிட்டரில் பதில்

புதுடெல்லி: “கடைசியாக கையெழுத்து போட்டதால் நீங்கள் கைது செய்யப்பட்டீர்களா? என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். இதற்கு என்னிடம் பதில் இல்லை” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ காவல் முடிந்ததை அடுத்து அவர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்தினர் மூலமாக, டிவிட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் சில தகவல்களை பதிவிட்டுள்ளார்.

ப.சிதம்பரத்தில் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் நேற்று, “நான் என் சார்பாக பின்வருபவற்றை டிவிட்டரில் பதிவிடும்படி எனது குடும்ப உறுப்பினர்களை கேட்டுக்கொண்டேன். இந்த வழக்கில் டஜன் கணக்கான அதிகாரிகள் உங்களுக்கு செயல்முறை மற்றும் பரிந்துரைகளை வழங்கினார்களே அவர்கள் கைது செய்யப்படவில்லை. நீங்கள் மட்டும் ஏன் கைது செய்யப்பட்டீர்கள்? ஏனென்றால் நீங்கள் கடைசியாக ைகயெழுத்தை போட்டுள்ளீர்கள்? என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்த டிவீட்களில் “இந்த கேள்விக்கு என்னிடத்தில் எந்த பதிலும் இல்லை”, “எந்த அதிகாரியும் தவறு செய்யவில்லை. யாரும் கைது செய்யப்படுவதை நான் விரும்பவில்லை” என்றும் ப.சிதம்பரம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: