தாக்கா: வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 224 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.சாட்டோகிராம், அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 342 ரன், வங்கதேசம் 205 ரன் எடுத்தன. இதைத் தொடர்ந்து, 398 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், 4ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 39, சவும்யா சர்க்கார் (0) இருவரும் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஷாகிப் 44 ரன் (54 பந்து, 4 பவுண்டரி) எடுத்து ஜாகிர் கான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஸசாய் வசம் பிடிபட்டார். மெகதி ஹசன் மிராஸ் 12 ரன், தைஜுல் இஸ்லாம் (0), சர்க்கார் 15 ரன் எடுத்து ரஷித் கான் சுழலில் மூழ்க, வங்கதேச அணி 173 ரன்னுக்கு சுருண்டது (61.4 ஓவர்). நயீன் ஹசன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.