ஊழியர் பற்றாக்குறையால் பணிகள் ஸ்தம்பிப்பு புரோக்கர்கள் பிடியில் திணறும் போக்குவரத்து அலுவலகங்கள்

மதுரை : ஊழியர்கள் பற்றாக்குறையால் மதுரை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உரிய நேரத்தில் சான்றுகள் பெற முடியாமல்பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலைகள் துரிதமாக முடியவேண்டுமானால், புரோக்கர்களை நாடவேண்டிய சூழல் இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மதுரை மாவட்டத்தில் மதுரை மத்தி, வடக்கு,தெற்கு  ஆகிய 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்களும், வாடிப்பட்டி, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய இடங்களில் யூனிட் அலுவலகங்களும் செயல்படுகிறது. லைசென்ஸ் பெறுதல், வாகனப்பதிவு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

தற்போது பெரும்பாலான பணிகள் ஆன்லைன் முறையில் நடக்கிறது என்பதால் கிட்டத்தட்ட ஓரிரு நாட்களில் பணிகள் முடியும் நிலை உள்ளது. ஆனால், இங்கு ஊழியர்கள் பற்றாக்குறை அதிகம் இருப்பதால் அன்றாட பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு நாளில் முடியவேண்டிய பணிகளுக்காக பொதுமக்கள் பல நாட்கள் அலையும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் (ஆர்டிஓ) பணியிடம் காலியாக உள்ளது. இங்கு பொறுப்பு அதிகாரியே உள்ளார். இதேபோல், மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 5 ஆய்வாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இங்கு ஒரு ஆய்வாளர் மட்டும் ெபாறுப்பு பணியில் உள்ளார். தெற்கு அலுவலகத்தில் 4 ஆய்வாளர்களுக்கு ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். மத்திய அலுவலகத்திலும் ஆய்வாளர் பணியிடம் குறைவாகவே உள்ளது.

உசிலம்பட்டி யூனிட் அலுவலகத்தில் ஆய்வாளர் இல்லை. இங்கு பொறுப்பில் இருந்த ஆய்வாளர் மதுரை வடக்கு அலுவலகத்திற்கான பொறுப்பு பணியை கவனிக்கிறார். இதனால், உசிலம்பட்டி அலுவலகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலூர் மற்றும் வாடிப்பட்டி அலுவலகங்களை ஒரே ஆய்வாளர் சுழற்சி முறையில் கவனித்து வருகிறார். இதனால் இங்கும் பணிகள் பாதித்துள்ளன.ஆர்டிஓ மற்றும் ஆய்வாளர் பணியிடங்களின் நிலை இது என்றால், இவர்களை சார்ந்துள்ள உதவியாளர், கண்காணிப்பாளர், கணிணி ஆபரேட்டர்கள் என ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அன்றாட பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு பணி முடிந்தாலும், மற்ற பணிக்காக நாட்கணக்கில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதுபோன்ற காரணங்களால், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும் தேவையான சான்றிதழ்களை உடனடியாக வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை பிடுங்கும் நிலையே உள்ளது. அதேநேரம் புரோக்கர்கள் மூலம் வருபவர்களின் பணிகள் மட்டும் துரிதமாக நடப்பதாகவும், அலுவலகத்திற்கு நேரடியாக வருபவர்கள் சார்ந்த பணிகளில் தாமதம் ஏற்படவும் செய்கிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சில வாரங்களுக்கு முன் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிகழ்வும் அரங்கேறியது. எனவே, புரோக்கர்களின் தொல்லையை தவிர்க்கவும், பொதுமக்கள் வீணாக அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்கவும். உடனடியாக தேவையான காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: