மோடி அரசின் 100 நாள் சாதனை விழா பாரதிய ஜனதா அழிவின் கொண்டாட்டமாக பார்க்கப்படும்: பிரியங்கா காந்தி கடும் கண்டனம்

புதுடெல்லி: `மோடி அரசின் 100 நாள் சாதனையை விழாவாகக் கொண்டாட அரசு தயாராகி வரும் நிலையில், ஆட்டோமொபைல், போக்குவரத்து, சுரங்கத் தொழில் துறைகள், இதை பாஜ.வின் அழிவின் கொண்டாட்டமாக பார்க்கும்’ என்று  காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.பாஜ தலைமையிலான மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சரிந்து, பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இதனை மறுத்து வந்த போதிலும், இந்திய ரிசர்வ்  வங்கியின் ஆண்டறிக்கையில் தெளிவாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை சீரமைக்க ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து 1.76 லட்சம் கோடி மத்திய அரசுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா நேற்றைய தனது டிவிட்டர் பதிவில், `பாஜ அரசு அதனுடைய 100 நாள் ஆட்சி சாதனையைக் கொண்டாட தயாராகி வருகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட ஆட்டோமொபைல்,  போக்குவரத்து, சுரங்கத் தொழில் துறைகள், இதனை பாஜ. உடைய அழிவின் கொண்டாட்டமாக பார்க்கும். அனைத்து துறைகளிலும் தொழிற்சாலைகள் மூடல், வேலை இழப்பு அன்றாட செய்தியாகி வருகிறது’ என்று ஊடகங்களின் அறிக்கையை  இணைத்து பதிவிட்டுள்ளார்.

அதேபோல, காங்கிரஸ் கட்சியின் டிவிட்டரிலும், `ஆட்டோமொபைல் தொழில் பிரிவுக்கு, `மக்கள் கார் வாங்காமல், வாடகைக் கார்களில் செல்வதே காரணம்’ என்று மக்களிடம் `சப்பை கட்டு’ கட்டும் கதையை மத்திய அரசு உடனடியாக நிறுத்தி  கொள்ள வேண்டும். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றை முறையாக செயல்படுத்தாததே பொருளாதார தேக்கத்துக்கு, மந்த நிலைக்கு காரணம் என்பதை ஒப்புக் கொண்டு அதில் இருந்து விடுபட தீர்வு காண வேண்டும்’ என்று  கூறப்பட்டுள்ளது.மேலும், `ஆட்டோ தொழில் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில், `மத்திய அரசின் நடவடிக்கைக்கு பின்னரும் ஆட்டோமொபைல் தொழில் துறையில் விற்பனை ஏன் சூடு பிடிக்கவில்லை’ என்று பரிகாசமாக கேள்வி எழுப்பிய மத்திய நிதித்துறை இணை  அமைச்சர் அனுராக் தாகூருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது’ என்று ஊடக அறிக்கையை இணைத்து பதிவிடப்பட்டிருந்தது.

Related Stories: