மேக்சிஸ் நிறுவன முறைகேட்டு விவகாரத்தில் ப.சிதம்பரம், கார்த்தி முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்: சிபிஐ, அமலாக்கத்துறை டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு

புதுடெல்லி: மலேசியாவின் மேக்சிஸ் நிறுவன முறைகேட்டு விவகாரத்தில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சிபிஐ நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விதிமுறைகளை மீறி சுமார் ரூ.3ஆயிரத்து 500கோடி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதில் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேடாக பணம் பெற்றதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இதையடுத்து இது தொடர்பாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் உட்பட மொத்தம் 12பேருக்கும் மேல் சேர்க்கப்பட்டனர்.  இந்த நிலையில் வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருப்பதற்காக ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். மனுவை விசாரித்து வந்த நீதிமன்றம் இருவரையும் கைது செய்ய பலமுறை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து,  ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கும் முன்ஜாமீன் வழக்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவிற்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்த விவகாரம் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. அதனால் இந்த வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வெளியில் இருந்தால் அதற்கான ஆதாரத்தை அழித்து விடுவார்கள். அதனால் அவர்களுக்கு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்தும், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மனு அடுத்த ஒருசில தினங்களில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 கோடியை திருப்பி தரமுடியாது

ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் மேக்சிஸ் நிறுவன முறைகேடு ஆகியவற்றில் சிக்கி இருக்கும் கார்த்தி சிதம்பரம் தனது சொந்த காரணங்களுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து அதனை பரிசீலனை செய்த நீதிமன்றம் 10 கோடியை பிணையத் தொகையாக செலுத்தி விட்டு செல்லுமாறு தலைமை நீதிபதி அமர்வு கடந்த மே மாதம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தொகையை செலுத்திய கார்த்தி வெளிநாடு சென்றும் வந்துவிட்டார். இந்த நிலையில் தாம் நீதிமன்றத்தில் செலுத்திய ரூ.10 கோடியை திருப்பி தருமாறு கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தீபக்குப்தா மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து உத்தரவில், ₹10 கோடியை அடுத்த மூன்று மாதத்திற்குள் கண்டிப்பாக திருப்பி கொடுக்க முடியாது. இதில் குறிப்பிட்ட தொகையான நீதிமன்றத்தின் வைப்பு நிதி கணக்கில் பாதுகாப்பாக இருக்கும். அதுகுறித்து மனுதாரர் கவலைப்பட தேவையில்லை என காட்டமாக தெரிவித்த நீதிபதிகள் பணத்தை திருப்பி கேட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: