இலங்கை ஆளும் கட்சியில் அதிபர் வேட்பாளர் தேர்வில் இழுபறி

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக நடந்த ஆளும் ஐக்கிய தேசிய கட்சி கூட்டத்தில் எந்த முடிவு எட்டபபடவில்லை.  இலங்கையில் வரும் டிசம்பர் 8ம் தேதிக்குள் அதிபர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், வேட்பாளரை தேர்வு செய்வதில் முக்கிய அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இலங்கையில் கேபினட் அமைச்சராக உள்ள ஆளும் ஐக்கிய தேசிய கட்சியை (யுஎன்பி) சேர்ந்த சஜித் பிரேமதாசா தன்னை முன்னிறுத்தி பொதுக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். எதிர்க்கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான ராஜபக்சேவின் சகோதருமான கொத்தபயா ராஜபக்சேவை எதிர்த்து வெற்றி பெறக் கூடிய ஒரே வேட்பாளர் சஜித் பிரேமதாசாதான் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள் இவருக்கு ஆதரவாக இல்லை.

இந்நிலையில், அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று கூட்டினார். இதில், அதிபர் வேட்பாளர் குறித்து ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.  

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.  சஜித் பிரேமதாசாவின் பிரசாரம் குறித்து கூட்டத்தில் எதுவும் பேசப்படவில்லை. கூட்டம் முடிந்ததும் நிருபர்களை சந்திக்காமல் யுஎன்பி தலைவர்கள் சென்று விட்டனர்.

Related Stories: