நாகை கடற்கரை களைகட்டியது; அதிபத்த நாயனார் தங்க மீனை சிவனுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி

நாகை: நாகையில் அதிபத்த நாயனார் சிவபெருமானுக்கு தங்கமீனை அர்ப்பணிக்கும் விழா நேற்று கோலாகலமாக நடந்தது. சென்னை கடற்கரையில் இருந்து தூத்துக்குடி கடற்கரை வரை 64 மீனவ குப்பங்கள் இருந்தன. இந்த 64 மீனவ குப்பங்களுக்கும் நாகை கடற்கரையில் உள்ள நுளைப்பாடி என்று அழைக்கப்பட்ட ம்பியார் நகர் தலைமை கிராமமாக இருந்தது. இந்த குப்பத்தில் தோன்றியவரே அதிபத்த நாயனார். இவர் சிவபெருமான் மீது தீவிர அன்பு கொண்டிருந்த காரணத்தால் தினந்தோறும் கடலுக்கு சென்று தான் பிடிக்கும் மீன்களில் பெரியதும், சிறந்ததுமான மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து கடலில் விடுவார்.

ஒரு நாள் அதிபத்தர் வலையில் ஒரே ஒரு மீன் மட்டுமே சிக்கியது. அப்போதும் அவர் மனம் தளராமல் பிடிபட்ட ஒரு மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் அவரது வலையில் ஒரே ஒரு மீன் மட்டுமே சிக்கியது. அப்போதும் அதிபத்தர் மனம் தளராமல் கிடைத்த ஒரே ஒரு மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணித்து வந்தார். இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. அதிபத்தரின் அன்பை சோதிக்க விரும்பிய சிவபெருமான் ஒரு நாள் அவரது வலையில் நவரத்தினமும், பொன்னும் பதிக்கப்பட்ட அதிசய மீனை சிக்க செய்தார்.

வலையில் சிக்கிய விலை மதிப்பற்ற அந்த ஒரே ஒரு தங்க மீனையும் அதிபத்தர் எந்தவித தயக்கமும் இன்றி சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்தார். அவரது அன்பில் மயங்கிய சிவபெருமான் பார்வதி சகிதமாக அதிபத்தருக்கு காட்சியளித்தார் என்பது வரலாறு.இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நாகை நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும். இந்த விழா நேற்று (29ம் தேதி) நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு பிற்பகல் 3 மணிக்கு நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் இருந்து காயாரோகண சுவாமி சமேத நீலாயதாட்சி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நாகை புதிய கடற்கரை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

தொடர்ந்து நாகை நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் கோயில் மற்றும் அதிபத்தர் வணங்கிய அமுதீசர் திருக்கோயில்களில் இருந்து அடியார்கள் சீர்வரிசைகளை ஊர்வலமாக நம்பியார்நகர் புதிய கடற்கரை நோக்கி எடுத்து வந்தனர். பின்னர் அங்கு காயாரோகண சுவாமி சமேத நீலாயதாட்சி அம்மன் முன் சீர்வரிசை தட்டுக்களை வைத்து சிறப்பு ஆராதனைகள் நடந்தது. அதிபத்த நாயனார் பரம்பரையை சேர்ந்த ஒருவர் சீர்வரிசை தட்டுகளில் ஒன்றில் இருந்த தங்கமீனை எடுத்து கொண்டு படகில் ஏறிச்சென்று தங்கமீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் விதமாக கடலில் வீசினார். அப்போது நையாண்டி, தப்பாட்டம் உள்ளிட்ட வாத்தியங்கள் முழங்க காயாரோகண சுவாமிக்கு ஆராதனைகள் நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் திரண்டு தரிசித்தனர்.

Related Stories: