சந்திரயான் -2 மாபெரும் வெற்றியைத் தரும்: மயில்சாமி அண்ணாத்துரை பேட்டி

புதுக்கோட்டை: சந்திரயான் 2 மாபெரும் வெற்றியை தரப்போகிறது என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். சந்திரயான் 2 என்ன செய்ய போகிறது என பல்வேறு நாடுகள் உற்றுநோக்கி வருவதாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய துணை தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் 20ம் ஆண்டு தொடக்கவிழாவில் மயிலசாமி அண்ணாதுரை கலந்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் 2008ம் ஆண்டு சந்திரயான் நிலவிற்கு அனுப்பப்பட்ட போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனவும், தற்போது சந்திரயான் 2 என்ன செய்ய போகிறது என பல நாடுகள் உற்றுநோக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்திரயான் 2 மாபெரும் வெற்றியை தரும் என தெரிவித்த அவர் வரும் காலங்களில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி மற்றும் செயற்கைகோள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் கூறினார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, பல தடைகளைக் தாண்டி பல சோதனைகளுக்கு பிறகு சரியான முறையில் சந்திரயான் 2 ஏவப்பட்டுள்ளது எனவும், சந்திரயான் 1 மற்றும் சந்திரயான் 2 ஆகியவற்றிற்கு இடையே மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து செப்டம்பர் 7 மிகமிக முக்கியமான நாளாக உலக அறிவியலாளர்களிடம் கருதப்படுகிறது. அந்த வகையில் இந்திய அறிவியலுடைய ஒரு உணர்வு உச்சகட்டமாக சந்திரயான் 2 மாபெரும் வெற்றியை தரப்போகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: