சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு ஆதரவு காஷ்மீர் பண்டிட்கள் அமெரிக்காவில் பேரணி

வாஷிங்டன்: சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து, அமெரிக்காவில் காஷ்மீர் பண்டிட்கள் பேரணி நடத்தி உள்ளனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியும், அம்மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக, காஷ்மீரில் கடந்த ஒரு  மாதமாக பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.இந்நிலையில், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டுள்ளதற்கு ஆதரவு தெரிவித்து, அமெரிக்காவில் வாழும் காஷ்மீர் பண்டிட்கள் பிரமாண்ட பேரணி நடத்தி உள்ளனர். அட்லாண்டா மாகாணத்தில் உள்ள சிஎன்என் தொலைக்காட்சி தலைமை  அலுவலகத்தின் முன்பாக நடத்தப்பட்ட இப்பேரணியில் காஷ்மீர் பண்டிட்களும்,  அமெரிக்கா வாழ் இந்தியர்களும் பங்கேற்றனர்.

இப்பேரணியில், காஷ்மீரில் இருந்து தாங்கள் வெளியேறிய தருணங்கள் குறித்தும், தீவிரவாதத்தின் பாதிப்புகள் குறித்தும் பண்டிட்கள் பகிர்ந்து கொண்டனர். காஷ்மீரி வம்சாவளியும், இந்திய அமெரிக்கர் தேசிய கூட்டமைப்பின் முன்னாள்  தலைவருமான சுபாஷ் ரஸ்தான் கூறுகையில், ‘‘சட்டப்பிரிவு 370, காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள ஷியா முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், காஷ்மீரி பண்டிட்கள், குஜ்ஜார்ஸ் மற்றும் காஷ்மீரி சீக்கியர்களுக்கு எதிரானது. மிகப்பெரிய  பாகுபாட்டை ஏற்படுத்திய அந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளதால், காஷ்மீரி பண்டிட்கள் தங்களின் தாய் மண்ணில் மீண்டும் கால் பதிக்க முடியும்,’’ என்றார்.

Related Stories: