புகழ் பெற்ற சதுர்த்தி பெருவிழா... பிள்ளையார்பட்டியில் கொடியேற்றத்துடன் துவங்கியது

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் புகழ் பெற்ற ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்.2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  கற்பகவிநாயகர் கோயிலில் இன்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. வடக்கு நோக்கி உள்ள விநாயகரின் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கொடிமரத்திற்கு முன் அங்குசத்தேவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து 50க்கும் அதிகமான சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓதினர். காலை 10.40 மணிக்கு கொடியேற்றப்பட்டடு, உற்சவ விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இன்று இரவு மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளி திருவீதி நடக்கிறது. 2ம் திருநாளான நாளை ஆக.25ம் தேதி காலையில் வெள்ளி கேடயத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 3ம் திருநாளான ஆக.26ம் தேதி காலையில் வெள்ளி கேடகத்திலும், இரவு பூத வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெற உள்ளது. 9ம் நாளான செப்.1ம் தேதி காலையில் திருத்தேருக்கு சுவாமி எழுந்தருளல் நடைபெறும். மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை வருடம் ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். மாலை 4 மணியவில் வடம் பிடிக்க தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.

10ம் திருநாளான செப்.2ம் தேதி காலை கோயில் குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொளுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெறும். அன்று இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதிஉலா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர்கள் அமராவதிபுதூர் இராம.அண்ணாமலை செட்டியார், தேவகோட்டை மீ.நாகப்ப செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Stories: