முசிறி பகுதியில் ஆபத்தை உணராமல் லோடு ஆட்டோவில் பயணிக்கும் மக்கள்

முசிறி : முசிறியில் லோடு ஆட்டோவில் பொதுமக்களை ஏற்றிச்செல்லும் டிரைவர்கள் மீது போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. முசிறி பகுதியில் லோடு ஆட்டோக்களில் பொதுமக்களை ஏற்றிச்செல்லும் நிகழ்வு தொடர் கதையாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொட்டியம் தோளூர்ப்பட்டி அருகே 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்று திரும்பிய தொழிலாளர்களை லோடு ஆட்டோவில் ஏற்றி வந்தபோது பலர் படுகாயமடைந்து பாதிப்படைந்தனர்.

சில தினங்களுக்கு முன்பு முசிறி அருகே உள்ள பேரூர் கிராமத்திலிருந்து துறையூர் அருகே எஸ்.என்.புதூர் கிராமத்திற்கு லோடு ஆட்டோவில் பயணித்தவர்கள் சாலை ஓரத்திலிருந்த கிணற்றில் விழுந்ததில் 8 பேர் பலியான நிலையில் 9 பேர் காயமடைந்தனர். லோடு ஆட்டோவில் பயணிகளை ஏற்றி செல்வோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் லோடு ஆட்டோக்களில் பொதுமக்கள் பயணிக்கும் நிலை தொடர்கிறது. இதனை போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதாக தெரியவில்லை.

இந்நிலையில் முசிறி பைபாஸ் சாலையில் நேற்று கூண்டு வடிவ லோடு ஆட்டோவில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் பயணித்தனர். எனவே மேலும் உயிரிழப்பு ஏற்படாத வகையில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் டிரைவர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: