திருமலையில் இருந்து திருப்பதி செல்லும் அரசு பஸ் டிக்கெட்டில் புனித ஹஜ், ஜெருசலேம் யாத்திரைக்கு விளம்பரம்

*பக்தர்கள் அதிர்ச்சி

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்ல வழங்கும்  டிக்கெட்டுகளின் பின்புறம் புனித ஹஜ் யாத்திரை, புனித ஜெருசலம் யாத்திரை செல்ல எங்களை தொடர்புகொள்ளலாம் என்று விஜயவாடாவை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் முகவரி தெலுங்கில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

இது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்துக்களின் புனித கோயிலான ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வரக்கூடிய நிலையில் அந்த டிக்கெட்டில் அனைத்து மதத்தையும் குறிக்கும் வகையில் இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால் குறிப்பிட்ட மதங்களை மட்டும் முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்தியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் திருமலைக்கு வரக்கூடிய பேருந்துகளில் சிலவற்றில் மட்டுமே இதுபோன்று இருப்பதாகவும், சில டிக்கெட்களில் அவ்வாறு விளம்பரம் இல்லை எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இவை அனைத்தும் விஜயவாடாவில் உள்ள போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் இருந்து வருகிறது. இதற்கும் இங்கு உள்ள அதிகாரிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றனர்.

Related Stories: