ஆண்டிபட்டி நகரில் சாலைகளில் நிறுத்தும் வாகனங்களால் விபத்துக்களில் சிக்கும் பொதுமக்கள்

*காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி நகரில் உள்ள சாலைகளில் நிறுத்தும் வாகனங்களால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு நிரந்தரமான தீர்வு காண காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி நகர் தேனி மாவட்டத்தின் கிழக்கு நுழைவாயில் அமைந்துள்ளது. இந்நகரின் வழியாக ராமேஸ்வரம், மதுரை, தேனி, கொச்சின் செல்லும் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி ஆண்டிபட்டியை சுற்றியுள்ள 160க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு காரணங்களுக்காக இந்நகருக்கு வந்து செல்கின்றனர்.

ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வரும் சூழலில், சாலையின் இருபுறமும் கார், வேன், டூவீலர் போன்ற வாகனங்களை பலர் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் நடைபாதை இன்றி தவித்து வருகின்றனர். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள், சிகிச்சைக்காக வரும் முதியவர்கள் விபத்துக்களில் சிக்கி வருகின்றனர். இதற்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆண்டிபட்டி நகரின் மெயின் ரோட்டில் வங்கிகள், உணவகங்கள், டீ கடைகள் அதிகம் உள்ளதால் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பும் அதிகரித்துள்ளது.

உணவு, டீ, வங்கிகளுக்கு செல்பவர்கள் வாகனங்களை விதிகளை மீறி சாலையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதுமட்டுமின்றி ஆட்டோ மற்றும் லாரியை நடு ரோட்டில் நிறுத்திக் கொள்கின்றனர். இதனால் ஒரு சில நேரங்களில் 108 வாகனங்களே செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள், பணிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் முதியவர்கள் என பலர் நடைபாதை இன்றி சாலையில் நடப்பதால் விபத்துக்களில் சிக்கி வருகின்றனர்.

சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்வதில்லை. எனவே தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் ஆண்டிபட்டி பேரூராட்சி, காவல்துறையினர் ஒன்றிணைந்து தேசிய நெடுஞ்சாலையில்  உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் நலன் கருதி நடைபாதை அமைத்தால் மட்டுமே உயிர்ப்பலியை தவிர்க்க முடியும் என்று தெரிவித்தனர்.

Related Stories: