மாவட்டத்திலேயே மிகப்பெரியது காவேரிப்பாக்கம் ஏரிக்கால்வாய்களை தூர் வர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

காவேரிப்பாக்கம்: வேலூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரியில் சில தினங்களாக பெய்த மழையால் சிறிதளவு தண்ணீர் உள்ளது. இதன் நீர்வரத்து கால்வாய்களை உடனடியாக தூர் வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரியது காவேரிப்பாக்கம் ஏரி. இதன் பரப்பளவு சுமார் 3,968 ஏக்கர். இந்த ஏரி நிரம்பினால் சிங்க மதகு, நரி மதகு, மூல மதகு, பள்ள மதகு உள்ளிட்ட 10 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் மூலம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும். இந்த ஏரி ஒருமுறை நிரம்பினால் சுமார் 3 போகம் விவசாயம் செய்யலாம்.

இந்நிலையில் காவேரிப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்  கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முசிறி, எடையந்தாங்கல், பாகவெளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழைநீர் ஏரிக்கு வரத்தொடங்கியது. இந்த தண்ணீர் ஏரியில் உள்ள பள்ளங்களில் குட்டைபோல் தேங்கியுள்ளது. இதனால் வறட்சியின் பிடியில் சிக்கி இருந்த ஏரி, தற்போது மழை காரணமாக பசுமையாக காட்சியளிக்கிறது.

இதன் காரணமாக ஆடு, மாடுகள் மேய்ந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆனால் ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாய்களில் செடிகள் முளைத்துள்ளது. எனவே இனி வரும் மழைநீரை பாதுகாப்பாக ஏரிக்கு வரும் வகையில் இக்கால்வாய்களை தூர்வார வேண்டும். மேலும் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: