சிறு, குறு தொழில்கள் அடியோடு அழியும் அபாயம்: கே.ஜேம்ஸ், தமிழ்நாடு குறுந்தொழில் சங்கம்(டாக்) கோவை மாவட்ட தலைவர்

தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள்  உள்ளது. தொழில் நகரமான கோவையில் மட்டும் 40,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது.  இதில், ஆட்டோமொபைல் தொடர்பாக மட்டும் 15,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது. இந்த சிறு, குறு தொழிற்சாலைகள் மூலம் கார், டூவீலர், 4 வீலர்சுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 3 மாதமாக ஆட்டோமொபைல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.   கார் உற்பத்தி செய்வது படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால், தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாமல் மாதந்தோறும், குறிப்பிட்ட நாட்கள் உற்பத்தியை நிறுத்தி, அந்த நாட்களில் கட்டாய விடுப்பு  கொடுக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.  கோவையில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கார் உற்பத்தி குறைக்கப்பட்டு வருவதால் அதை நம்பியுள்ள சிறு, குறு நிறுவனங்கள் எல்லாம் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த நிறுவனங்கள் அடியோடு அழியும் அபாயத்தை நோக்கிச் செல்கின்றன. இந்த ஆலைகளில் சொற்ப சம்பளம் பெறும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழிற்சாலைகள், கடந்த 3 மாதமாக வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாததால் “நோ ஓர்க்” கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை நீடிப்பதற்கும், நெருக்கடியை தீர்க்கவும் எந்த நடவடிக்கையும் அரசு தரப்பில் இதுவரை எடுக்கப்படவில்லை. இதே நிலை நீடித்தால் தொழிற்சாலைகள், பிரபல கார் கம்பெனிகள் அடையாளம் தெரியாமல் போய் விடும்.இக்கட்டான சூழ்நிலையில் எங்களை மீட்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது  வேதனையானது. பாதிக்கப்பட்டுள்ள  எங்களுக்கு வங்கிகளில் வட்டி வீதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டு வருகிறோம். இது தொடர்பாக கடிதமும் எழுதியுள்ளோம். இதே நிலை தொடர்ந்து நீடிக்குமானால் ஆட்டோமொபைல் சார்ந்த பல்வேறு சிறிய தொழில்கள் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் நெருக்கடிக்கு தள்ளப்படும். இந்த நெருக்கடிக்கு முதல் காரணம் என்று சொன்னால் மக்களிடம் வாங்கும் சக்தி என்பது அதிகரிக்காமல் குறைந்து கொண்டு வருவதுதான். பெருவாரியாக பல இடங்களில் பார்த்தீர்கள் என்றால், இருக்கிற விலைவாசிக்கு தான் அவர்களது சம்பளத்தின் வரவு கரெக்டாக இருந்து வருகிறது. வரவு என்பது பெரும் நெருக்கடியாக இருந்து வருகிறது. வாழ்வதற்கான போராட்டமே பெரிய ேபாராட்டமாக இருந்து வருகிறது. இதை அரசு சரியாக கவனிக்கவில்லை என்பது எனது பார்வையாக உள்ளது.

சம்பளத்தை விட அளவுக்கு அதிகமான கடன் வாங்கி தான் செலவு செய்யும் நிலையில் மக்கள் உள்ளனர். இதனால், பொருட்களை, கார், பைக் போன்றவை  வாங்கும் சக்தி மிகவும் குறைந்து வருகிறது. தமிழக அரசு உடனடியாக ஆட்டோமொபைலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மத்திய அரசு தொழிற்சாலைகள் வாங்கியுள்ள வங்கி கடனில் இருந்து நாங்கள் மீள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் கட்டுவதில் இருந்து காலம் நீட்டிப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் சிறு, குறு தொழிலுக்கு பாதுகாக்கப்படும் என்று சொல்வதை உறுதிப்படுத்த வேண்டும். பெரிய நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டார்கள். அவர்கள் மீண்டும் உற்பத்தியை தொடங்க என்ன தேவை என்பதை ஆராய்ந்து அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். சிறு, குறு தொழிற்சாலைகள், கடந்த 3 மாதமாக வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். வங்கிகளில் 3 மாதங்களில் லோன் கட்ட முடியாவிட்டால் ‘கறுப்பு பட்டியலில்’ கொண்டு வந்து விடுகிறார்கள்.

Related Stories: