கட்டி முடித்து பல மாதங்களாக திறக்கப்படாத அரியூர் ரயில்வே மேம்பாலத்தை பொதுமக்களே திறந்தனர்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி: 5 ஆண்டு போராட்டத்திற்கு தீர்வு

வேலூர்: அரியூர் மேம்பால கட்டுமான பணி 5 ஆண்டுகளாக நடந்தது. ஆனால் கட்டி முடித்து பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதை பொதுமக்களே இன்று திறந்து வைத்தனர். வேலூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேலூர்-பெங்களூர் சாலையில் டவுன் ரயில் நிலையம் அருகிலும், கஸ்பா, தொரப்பாடியில் (அரியூர்) ரயில்வே மேம்பாலங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்கேற்ப முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் வேலூரில் 2 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, தலா ₹16 கோடி மதிப்பீட்டில் கஸ்பாவில் 2013 ஆண்டும், தொரப்பாடியில் (அரியூர்) 2014ம் ஆண்டும் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது.

ரயில்வே மேம்பாலப்பணிகள் தொடங்கியதும் கோரிக்கை வைத்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மேம்பால பணிகள் மிகவும் மந்தமான நிலையில் கட்டப்பட்டு வந்தது. இதனால் வாகனங்கள் சுமார் 10 கி.மீ. தூரம் சுற்றி வந்தன. இருசக்கர வாகன ஓட்டிகள் கூட இதனால் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். இதையடுத்து ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அரியூர் ரயில்வே கேட்டில் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் தலைமையில் திமுகவினர் ரயில் மறியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரயில்வே துறை அதிகாரிகளிடம் எம்எல்ஏ நந்தகுமார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இருசக்கர வாகனங்கள் தண்டவாளத்தை கடந்து செல்லும் வகையில் வழி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு வழித்தடம் அமைக்கப்பட்டது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், மேம்பால கட்டுமான பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆனது. ஆனால் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கவில்லை. இதனால் ஸ்ரீபுரத்திற்கு வரும் பக்தர்கள்மற்றும் அணைக்கட்டு, ஒடுகத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் சுமார் 10 கி.மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலையே நீடித்தது. தற்போது மழை பெய்து வருவதால் தண்டவாளத்தை கடக்க அமைக்கப்பட்ட வழி சேறும், சகதியுமாக மாறியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

மேம்பாலம் திறப்பு விழா எப்போது என்று தெரியாத நிலையில், ஆத்திரமடைந்த மக்கள் இன்று மேம்பாலத்தின் இருபுறமும் இருந்த தடுப்புச்சுவர்களை அகற்றி ரயில்வே மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி அரசு மற்றும் தனியார் பஸ்களும் மேம்பாலம் வழியாக இன்று இயக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: