மக்கள் போராட்டத்தில் சீனா தலையிடக் கூடாது : ஹாங்காங் போலீஸ் காட்டம்

ஹாங்காங் : ‘ஹாங்காங்கில் கடந்த பத்து வாரங்களாக நடந்து வரும் மக்கள்  போராட்டத்தை ஒடுக்குவதில் சீனா தலையிடத் தேவையில்லை,’ என்று அந்நாட்டு  போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தி  விசாரிக்கும் சட்டத் திருத்த மசோதாவை நிரந்தரமாக ரத்து செய்யவும்,  சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் ஹாங்காங்கில் பொதுமக்கள் தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது.  கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டக்காரர்கள் மீது காவல்துறை  கண்ணீர் புகைகுண்டு வீசியது. இதற்கு பதிலடியாக அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளும், கற்களும் வீசப்பட்டன. சுரங்க நடைபாதை ஒன்றின் அருகில் போராடும்  மக்களுக்கு மிக அருகில் நின்று ரப்பர் குண்டுகளால் போலீசார் சுடும் காட்சி  வைரலாகி வருகிறது. அதோடு, ஹாங்காங் எல்லையிலும் சீனா தனது ராணுவத்தை குவித்து வருவது, பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அரசுக்கு எதிரான  போராட்டக்காரர்கள் மீது கொதிக்கும் தண்ணீரை பாய்ச்சி விரட்டுவது குறித்து  பரிசீலிக்கப்படுகிறது. இவர்களை ஒடுக்கும் விவகாரத்தில் சீனா தலையிடத்  தேவையில்லை. அவர்களை ஒடுக்குவதில் காவல்துறை உறுதியான நடவடிக்கைகளை எடுத்து  வருகிறது.

அதேசமயம், போராட்டக்காரர்களின் ஒருங்கிணைப்பும் நாளுக்கு நாள்  வலுவடைந்து வருகிறது,’ என்று காவல்துறையின் மூத்த அதிகாரிகளில் சிலர்  தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘இது அரசியல் பிரச்னை. எனவே அதற்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். போராட்டக்காரர்கள்  மீதான பிடியை சீனா இறுக்கி கொண்டே சென்றால், போராட்டம் தொடர்ந்து நீடிக்கும்,’ என்றும்  தெரிவித்தனர்.

Related Stories: