பறவை மோதியதால் 2 இன்ஜின்களும் செயலிழப்பு விமானத்தை திறமையாக தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய பைலட்: ரஷ்யாவில் பரபரப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் இருந்து புறப்பட்டு சென்ற விமானத்தின் மீது பறவை கூட்டம் மோதியதால், அதன் 2 இன்ஜின்களும் செயல் இழந்தாலும் சாதுர்யமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றினார் பைலட்.  ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள சுகோஸ்கி விமான நிலையத்தில் இருந்து கிரிமியாவுக்கு நேற்று யூரல் ஏர்லைன்சின் ஏ-321 என்ற விமானம் 226 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. விமானம் மேல் எழும்பிய சில நிமிடங்களில் அதன் மீது கடல் பறவைக் கூட்டம் மோதியது. இதில் விமானத்தின் 2 இன்ஜின்களும் செயல்படாமல் ஸ்தம்பித்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பைலட் விமானத்தை உடனடியாக தரையிறக்க இடம் தேடினார். அப்போது, விமான நிலையத்திற்கு அருகே 5 கிமீ தொலைவில் உள்ள மக்காச்சோளம் பயிரிடப்பட்டு இருந்த நிலத்தை கண்டார். விமானத்தை தரையிறக்க சிறிதாக சமமான நிலப்பரப்பு தேவை. அதனால், அந்த இடத்தை தேர்வு செய்து விமானத்தை தரையிறக்கினார்.

முன்னதாக, விமானத்தில் நிரப்பப்பட்டு இருந்த எரிபொருள் முழுவதையும் கீழே கொட்டினார். விமானம் தரையிறங்கும் போது சிறிது விபரீதம் நடந்தாலும், அந்த எரிபொருள் தீப்பற்றி விமானம் எரியும் அபாயம் உள்ளது. அதை தவிர்க்கவே, எரிபொருள் முழுவதையும் அவர் கீழே கொட்டினார். விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட அதிர்வில், காயம் அடைந்த 55 பயணிகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. 5 குழந்தைகள் உள்பட 23 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பைலட் மற்றும் விமான ஊழியர்களின் செயலால் பயணிகள் காப்பாற்றப்பட்டனர். இதற்காக, விமானிகளுக்கும், விமான ஊழியர்களுக்கும் நாட்டின் மிக உயரிய விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: