காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசிக்க வேண்டும்: பாக். தூண்டுதலால் சீனா கடிதம்

நியூயார்க்: ‘காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை நடத்த வேண்டும்,’ என்று சீனா திடீரென கோரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, கடந்த 5ம் தேதி அதை லடாக், ஜம்மு காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இந்தியாவின் இந்த முடிவை எதிர்த்து ஐநா பொதுச் செயலாளர் கட்டரசிடம் பாகிஸ்தான் முறையிட்டது. ஆனால், சிம்லா ஒப்பந்தப்படி இந்த விவகாரத்தில் ஐநா தலையிட முடியாது என அவர் கைவிரித்து விட்டார். இதையடுத்து, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முறையிடப் போவதாக அந்நாடு தெரிவித்தது. இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை, ‘காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது இந்தியாவின் உள்விவகாரம்,’ என பதிலடி தந்தது.

 இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி சமீபத்தில் கூறுகையில், ‘காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐநா பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும். ஐநா.வின் தீர்மானத்தை மீறி இந்தியா சட்ட விரோத செயலில் ஈடுபட்டுள்ளது,’ என்றார். மேலும், இப்பிரச்னையை பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கும்படி தனது நட்பு நாடான சீனாவையும் பாகிஸ்தான் வலியுறுத்தியது.  இது தொடர்பாக ஐநா தூதர் ஒருவர் கூறுகையில், ‘‘பாகிஸ்தானை தொடர்ந்து அதன் முக்கிய கூட்டாளியான சீனாவும், இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலின் மற்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி, கூட்டம் நடத்தப்படும் தேதி, நேரத்தை முடிவு செய்யப்படும். இதற்கான கூட்டம் இன்று (வெள்ளிகிழமை) நடத்த ஆலோசிக்கப்பட்டு உள்ளது,’’ என்றார்.

Related Stories: