19 ஆண்டுகளுக்கு பின் குப்பகவுண்டன்வலசு குளத்தில் தண்ணீர் திறப்பு

வெள்ளகோவில்: நொய்யல் ஆற்றில், வெள்ள காலங்களில் செல்லும் தண்ணீர் காவிரியில் கலந்து வந்தது. இதனை பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் சின்னமுத்தூர் ரூ.13 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையில் இருந்து மிகவும் வறட்சி பகுதியான, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலூகா கார்வழி அருகே குப்பகவுண்டன்வலசில் அமைந்துள்ள 300 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்திற்கு 10.21 கி.மீ., நீளமுள்ள ஊட்டு கால்வாய் வெட்டப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. பாசன கால்வாய் மூலம் கரூர் மாவட்டம் மின்னம்பள்ளி, கவுண்டன்புதூர், பஞ்சமாதேவி, சங்கராம்பாளையம், அஞ்சூர், நெச்சிகபாளையம், மண்மங்கலம், நெரூர் வரை 20 ஆயிரம் ஏக்கர் நேரடி பாசனமும், 5 ஆயிரம் ஏக்கர் கசிவு நீர் பாசனமும் பெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு முதல் திருப்பூர் சாயக்கழிவு தண்ணீர் அதிக அளவு கலந்து நொய்யல் ஆற்றில் வந்ததால். நீதிமன்ற உத்திரவின்படி இந்த குளத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக கடந்த 19 ஆண்டுகளாக அப்பகுதியில் கடும் வறட்சியும், நிலத்தடி நீர் மட்டம் சரிந்து, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நொய்யல் ஆற்றில் மழை வெள்ளம் வரும் சமயங்களில் அந்த தண்ணீரையாவது திறந்து விட வேண்டும் என கரூர் மாவட்ட பாசன விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

கடந்த வரத்தில் தென்மேற்கு பருவ மழையால், நீர் வரப்பெற்று நொய்யலில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வெள்ள நீர் சென்றது. இதையறிந்த விவசாயிகள் மழைநீரை குப்பகவுண்டன்வலசு குளத்திற்கு விடக்கோரி, கரூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் கடந்த 10ம் தேதி தடுப்பணையில் முற்றுகையிட்டு 6 மணிநேரம் போராட்டம் நடத்தினர். அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, தண்ணீர் திறந்து விட்டனர். பின் அன்றிரவே தடுப்பணை கதவுகள் பழுதடைந்தால் தண்ணீர் நிறுத்தப்பட்டது. பின் அதிகாரிகள் நொய்யல் ஆற்றில் திறந்து விட்டனர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளால் தடுப்பணை சட்டர்கள் சீரமைத்து, நேற்று முன்தினம் அதிகாலை முதல் மீண்டும் ஊட்டுக்கால்வாய் வழியாக 260 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரானது நேற்று மதியம் குப்பகவுண்டன்வலசு குளத்துக்கு சென்றடைந்து. இதனால் பாசன விவசாயிகளும், அரவக்குறிச்சி வட்டத்தில் வடக்குப்பகுதி பொதுமக்கள் பெரும் மகிழ்சியடைந்தனர். 19 ஆண்டுகளுக்கு பின் நொய்யல் ஆற்று மழைநீர் சென்றடைந்து. இந்த தண்ணீர் வருவதால் 20 ஆயிரம் ஏக்கர் பயன் பெரும் என்றும் வரும் மாதத்தில் மழை நீர் வரும்போது தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: