லண்டன்: ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் 2வது போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மோதுகிறது பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில், ஆஸ்திரேலிய அணி 251 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றதுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 24 புள்ளிகளை தட்டிச் சென்றது.இந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஆஸி. அணியில் ஸ்மித், வேடு, கவாஜா, பெய்ன் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். தொடக்க வீரர்கள் வார்னர், பேங்க்ராப்ட் கணிசமாக ரன் குவித்தால் அந்த அணி பெரிய ஸ்கோரை எட்ட முடியும். பந்துவீச்சிலும் கம்மின்ஸ், சிடில், லயன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.