குஜிலியம்பாறையில் குடிகாரர்களின் கூடாரமான சமுதாயகூடம்

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் உள்ள சமுதாயகூட காம்பவுண்ட் கேட் திறந்தே கிடப்பதால் குடிகாரர்கள் கும்மாளமிட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குஜிலியம்பாறையில் கடந்த 2007-08ம் ஆண்டு பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய கூடம் கட்டப்பட்டது. இதில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, குளியலறை வசதி, சமையல் கூடம் மற்றும் காம்பவுண்ட் சுவர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. குஜிலியம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகள், அரசுத்துறை சார்ந்த பொது நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுகின்றன. சமுதாய கூடம் கட்டப்பட்டு ஒரு சில ஆண்டுகள் வரை பராமரிப்பு பணி இருந்து வந்தது. நாளடைவில் போதிய பராமரிப்பு பணி செய்ய பாளையம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கழிப்பறை மற்றும் குளியலறை கதவுகள் மற்றும் காம்பவுண்ட் சுவர் கட்டிடம் சேதமடைந்து உள்ளது.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘குஜிலியம்பாறையில் 11வது வார்டு மெயின் ரோட்டில் குடியிருப்புகளின் நடுவே சமுதாய கூடம் உள்ளது. இந்த சமுதாய கூடம் காம்பவுண்ட் கேட்டிற்கு பூட்டு போடாமல் திறந்த நிலையிலேயே உள்ளது. இதை சாதகமாக்கிக் கொண்ட குடிகாரர்கள் இரவு நேரத்தில் சமுதாய கூட வளாகத்தில் திறந்த வெளியில் மது அருந்துகின்றனர். மேலும் சமுதாய கூடம் மொட்டை மாடிக்கு சென்று மது அருந்துகின்றனர். இது குறித்து இப்பகுதி மக்கள் பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேரூராட்சி நிர்வாகத்திடம் காம்பவுண்ட் கேட்டை பூட்டுவதற்கு ஒரு பூட்டு வாங்க பணம் இல்லையா? சமுதாய கூடம் குடிகாரர்களின் கூடாரமாக உள்ளதால் இப்பகுதி பெண்கள் அச்சத்துடனே இருந்து வருகின்றனர். எனவே சமுதாய கூடம் வளாகம் திறந்த நிலை பாராக செயல்படுவதை தடுத்து நிறுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: