கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் யார்? : ஜான்சன்,ஜெரோமி இடையே கடும் போட்டி

லண்டன் : பிரிட்டனின் அடுத்த ஆளுங்கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் யார் என்பது நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் எம்.பி.க்கள் ஏற்க மறுத்துவிட்டதை அடுத்து பிரதமர் தெரேசா மே, பிரதமர் பதவியிலிருந்து கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஆளும் பழமைவாய்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இப்பதவிக்கு முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் மற்றும் வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஜெரோமி ஹன்ட் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Advertising
Advertising

ஏற்கனவே ஆளும் கட்சியை சேர்ந்த உயர்மட்ட குழு உறுப்பினர்கள் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துவிட்ட நிலையில் நாளை வாக்கு என்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதனிடையே போரிஸ் ஜான்சன் திறமை மிக்கவர், அவரது தலைமை மூலமாக பல்வேறு வரலாறு படைக்கப் பட்டிருக்கிறது. மேலும் கட்சியிலும், ஆட்சியிலும் பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்துச்சென்றதில் போரிசின் பங்கு இன்றியமையாதது என்று சக போட்டியாளர் ஜெரோமி ஹன்ட் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்நிலையில் போரிஸ் ஜான்சன், ஜெரோமி ஹன்ட் ஆகிய இருவரில் யார் பிரிட்டன் பிரதமர் என்ற வினாவுக்கு நாளை விடை கிடைத்துவிடும். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் பிரதமர் தெரேசா மே பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்திடம் அளிக்க இருக்கிறார். அதன் பின்னர் ஆளும் கட்சியின் புதிய தலைவரை நாட்டின் பிரதமராக அங்கீகரிக்கும் உத்தரவை ராணி நாளை பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: