கோவை விமான நிலையத்தில் வெடி பொருள் பீதி

கோவை: கோவை விமான நிலையத்தில், ஸ்கேனரில் வெடி பொருளுக்கான அறிகுறியுடன் பார்சல் தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சரக்கு விமானத்திற்கு ஏற்ற இரண்டு மூட்டைகளில் பார்சல் பெறப்பட்டிருந்தது. 95 கிலோ எடையில் இருந்த இரு மூட்டைகளையும் ஸ்கேனரில் பரிசோதித்தபோது வெடி பொருளுக்கான அறிகுறி தென்பட்டது. இதுதொடர்பாக ேகாவை மாநகர போலீசின் வெடி குண்டு கண்டறியும் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். பார்சல் விமானத்தில் ஏற்ற தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பார்சல் மூட்டை பிரிக்கப்பட்டு அதில் இருந்த பொருள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் கண்ணாடி மற்றும் டோர் பிரேம்களுக்கு பயன்படுத்தும் வேதி பொருள் பவுடர் இருப்பது  தெரியவந்தது. துடியலூரில் உள்ள ஒரு தொழிற்சாலை நிர்வாகத்தினர், சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு இந்த பவுடரை அனுப்பியுள்ளனர். மும்பை விமான நிலையத்தில் டெலிவரி செய்யும் வகையில் பார்சல் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. சோதனைக்கு பின் விமான நிலைய நிர்வாகத்தினர் நேற்று வேதிப்பொருள் பவுடர் பார்சலை கார்கோ விமானம் மூலமாக மும்பைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் விமான நிலைய வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: