தீவிரவாதிகள் அடுத்தடுத்து அட்டகாசம் பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு பெண் மனித குண்டு தாக்குதல்: 7 பேர் பலி: 40 பேர் காயம்

பெஷாவர்: பாகிஸ்தானில் சோதனை சாவடி, மருத்துவமனையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, தற்கொலை படை தாக்குதலில் 7 பேர் பலியானார்கள். 40 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு உட்பட்ட  தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இங்குள்ள கோட்லா சீடன் சோதனை சாவடிக்கு முகமூடி அணிந்தபடி இரண்டு மோட்டார் பைக்குகளில் வந்த அடையாளம் தெரியாத 4 ேபர் அங்கிருந்த போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். இதில்  போலீசார் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து தாக்குதலில் உயிரிழந்த போலீசாரின் உடல்கள் மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது, அங்கு புர்கா அணிந்தபடி அமர்ந்திருந்த பெண் மனித வெடிகுண்டு தீவிரவாதி ஒருவர் ஆம்புலன்சை சுற்றியிருந்த மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினார். இந்த தற்கொலை படை தாக்குதலில் இரண்டு போலீசார் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மருத்துவமனைக்கு வருவோரை நுழைவு வாயிலில் போலீசார் சோதனை செய்கின்றனர். இந்த பிராந்தியத்தில் பெண் மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல்  நடத்தப்பட்டுள்ளது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. தாக்குதல்  நடத்தியவரின் முடி, உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டு பரிசோதனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்புக்கு 7 முதல் 8 கிலோ வரையிலான வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Related Stories: