பீகாரில் இருந்து நாமக்கல்லுக்கு 2600 டன் மக்காசோளம் வருகை

நாமக்கல்: பீகார் மாநிலத்தில் இருந்து 2600 டன் மக்காசோளம் சரக்கு ரயிலில் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள் அதிகம் உள்ளது. கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் மக்காசோளம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால் மக்காசோளம் உற்பத்தி குறைந்துவிட்டது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து மக்காசோளத்தை தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் வாங்கி வந்து நாமக்கல்லில் உள்ள பண்ணையாளர்களுக்கு பிரித்து கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்திலிருந்து  2600 டன் மக்காசோளம் சரக்கு ரயிலில் நாமக்கல் வந்தது. இவற்றை அகர்வால் டிரேடிங் என்ற தனியார் நிறுவனம் பீகார் மாநிலத்தில் இருந்து வாங்கி வந்தது. இந்த மக்காசோளத்தை நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ரயில் நிலையத்தில் இருந்து இறக்கி 125 லாரிகள் மூலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோழிப்பண்ணைகளுக்கு  அனுப்பி வைத்தது.

Related Stories: