கடையநல்லூர் நகராட்சியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கடையநல்லூர்: கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக தொடர் சாரல் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடையநல்லூர் நகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மழைக்காலத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலினால் ஏராளமான பொது மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு முதல் ஆணையாளர் பவுன்ராஜ் தீவிர முயற்சியால் சுயஉதவிக்குழு பெண்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை கொண்டு வீடு வீடாக சென்று கொசுப்புழு உற்பத்தியாகிறதா என ஆய்வு செய்து கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டபிறகு தற்போது கட்டுக்குள் உள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆணையாளர் பவுன்ராஜ் உத்தரவின் படி சுகாதார அலுவலர் நாராயணன், சுகாதார ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி ஆகியோர் கண்காணிப்பில் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கும் தனித்தனியாக கொசு ஒழிப்பு பணியாளர் குழுக்கள் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கொசு மருந்து அடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் இல்லாத நகராட்சி என்ற பெயரை தக்க வைக்கும் வகையில் முழு வீச்சில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது என்று ஆணையாளர் பவுன்ராஜ் கூறினார்.

Related Stories: