நில இழப்பீடு தொகை 14 கோடி வழங்காததால் நெல்லை சப்-கலெக்டர் அலுவலகம் அதிரடி ஜப்தி: ஏசி, மின்விசிறி, நாற்காலிகளை அள்ளிச் சென்றனர்

நெல்லை: நெல்லை  அரசு பொறியியல் கல்லூரிக்கு நிலம் கையகப்படுத்தியதில் ரூ.14 கோடி நில இழப்பீட்டுத் தொகை வழங்காததால், நெல்லை சப்-கலெக்டர் அலுவலகம் ஜப்தி செய்யப்பட்டது. மின் விசிறி, ஏசி, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை நீதிமன்ற அமீனா முன்னிலையில் ஊழியர்கள் அள்ளிச் சென்றனர். நெல்லை  அரசு பொறியியல் கல்லூரிக்கு 1984ல் நாகர்கோவிலைச் சேர்ந்த  பயோனியர் குழுமத்திற்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு இழப்பீடாக 2005 மற்றும் 2012 ஆகிய இரு தவணைகளில் ரூ.6  கோடி வழங்கப்பட்டது. பாக்க ரூ.14 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதற்கிடையே நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையை குறைக்கக்கோரி நெல்லை ஆர்டிஓ  சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் 2006ல் மேல் முறையீடு செய்யப்பட்டது. அப்போது ஒரு சென்ட் நிலத்திற்கு ரூ.9,397 வீதம் நிர்ணயம் செய்து நீதிபதி சத்தியநாராயணா உத்தரவிட்டார். அதன்பிறகும்  இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.

கடந்த 2018 ஜூன் மாதம் ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றக்கோரி நெல்லை சப்-கோர்ட்டில்  நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இழப்பீட்டுத்  தொகைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை சப்-கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய சார்பு நீதிபதி  கதிரேசன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலுடன் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தை  ஜப்தி செய்வதற்காக பயோனியர் குழுமத்தின் வாரிசுதாரர்கள், அவர்களது வக்கீல்  பெருமாள்பிள்ளை, நீதிமன்ற ஆமினா சிவகுமார் ஆகியோர் நேற்று மதியம் 12 மணிக்கு  வந்தனர். உடன் ஊழியர்களையும் அழைத்து வந்தனர்.  அப்போது மனுதாரரின் வக்கீலுக்கும், அலுவலக    ஊழியர்களுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. கோர்ட் உத்தரவின்    அடிப்படையிலேயே ஜப்தி செய்ய வந்துள்ளதாக வக்கீல் தெரிவித்தார். இதனால் ஊழியர்கள் எதிர்ப்பை கைவிட்டனர். எலக்ட்ரீசியன் மூலம் அங்குள்ள மின் விசிறிகளை ஒவ்வொன்றாக கழற்றத் தொடங்கினர்.

மேலும் ஏசி இணைப்புகளை துண்டித்து, ஏசி பெட்டிகளை எடுத்தனர். இதுதவிர மேஜை, நாற்காலி, அலமாரி, உள்ளிட்டவைகளையும் எடுத்துச் சென்றனர். சப்-கலெக்டர் அலுவலக ஜீப்பையும் ஜப்தி செய்ய முடிவு செய்தனர். ஆனால், சப்-கலெக்டர் மணிஷ் நாரணவேரே வெளியில் சென்றிருந்ததால் அது தப்பியது.  ஜப்தி நடவடிக்கையின் போது ஒரு சில ஊழியர்களே அலுவலகத்தில் இருந்தனர். ஏசி, மின் விசிறிகள் எடுத்துச் செல்லப்பட்டதால் அவர்களால் உள்ளே இருந்த பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. கணினிகளையும் இயக்க முடியவில்லை. இந்த ஜப்தி நடவடிக்கையால் சப் கலெக்டர் அலுவலக பணிகள் அனைத்தும் முடங்கின.

Related Stories: