சிவகங்கை அருகே சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

சிவகங்கை: சிவகங்கை அருகே சேதமடைந்துள்ள திருமலை- வலையராதினிப்பட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருமலையில் இருந்து வலையராதினிப்பட்டி செல்லும் தார்ச்சாலை சுமார் 2கி.மீ தூரம் கொண்டது. திருமலை, மேலப்பூங்குடி, வீரபட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதி கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்த சாலை வழியே நடந்து மற்றும் டூவீலரில் திருமலை வந்து இங்கிருந்து பஸ் மூலம் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இச்சாலை முற்றிலும் சிதைந்து குண்டும், குழியுமாய் போக்குவரத்திற்கு பயனற்ற வகையில் உள்ளது. இதனால் மாணவர்கள், கிராமத்தினர் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்,‘‘திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் விழா நேரங்களில் பல்வேறு ஊர்களில் இருந்து அதிகப்படியான வாகனங்கள் இந்த சாலை வழியே வரும். பிரதான சாலையான இச்சாலை போதிய தரம் இல்லாமல் போடப்பட்டது. பல்வேறு கிராமங்களுக்கு முக்கிய சாலையான இச்சாலை பல ஆண்டுகளாக சிதைந்து கிடக்கிறது. அவ்வப்போது வந்து அதிகாரிகள் பார்த்து சென்றாலும் சரி செய்ய நடவடிக்கை இல்லை. தற்போது பராமரிப்பு செய்ய முடியாத அளவில் சிதைந்து போயுள்ளது. எனவே புதிய சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

Related Stories: