ரயில் நிலையங்கள் தோறும் நிறுத்தி வைக்கப்படுகிறது: தினமும் காலதாமதமாக வரும் ஈரோடு - நெல்லை ரயில்

நெல்லை: ரயில்வே ஸ்டேஷன்கள் தோறும் நிறுத்தி வைக்கப்படுவதால் ஈரோடு- நெல்லை பயணிகள் ரயில் தினமும் காலதாமதமாக நெல்லைக்கு வந்து சேருகிறது. இதனால் வெளியிடங்களுக்கு செல்வோர் இரவு ேநரத்தில் திண்டாடுகின்றனர். நெல்லை-ஈரோடு- மயிலாடுதுறை இடையே தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மறுமார்க்கமாக இதே ரயில் ஈரோட்டில் இருந்து தினமும் 12.35 மணிக்கு புறப்பட்டு நெல்லை வருகிறது. இந்த ரயில் ஊஞ்சலூர், கொடுமுடி வழியாக திண்டுக்கல்லுக்கு மாலை 4.15 மணிக்கு வந்துவிடுகிறது. அதன் பின்னர் ரயில் திண்டுக்கல்லில் மயிலாடுதுறையில் இருந்து வரும் இணைப்பு ரயிலுக்காக சுமார் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இரண்டு ரயிலும் இணைக்கப்பட்ட பின்னர் புறப்படும் ஈரோடு- நெல்லை பயணிகள் ரயிலுக்கு வருகிற வழியெல்லாம் சோதனைகள் காத்திருக்கின்றன. குறிப்பாக தென்மாவட்டங்களில் இருந்து செல்லும் அத்தனை எக்ஸ்பிரஸ் ரயில்களையும் எதிர்ெகாள்ள வேண்டியதிருப்பதால் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் கூடுதல் நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. நெல்லை, கன்னியாகுமரி, ெசந்தூர், அனந்தபுரி, முத்துநகர், பெங்களூர் உள்ளிட்ட பல ரயில்களை எதிர்கொண்ட பின்னரே ஈரோடு பயணிகள் ரயில் நெல்லைக்கு வருகிறது. இதற்காக மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மணிக்கணக்கில் காத்து நிற்கிறது. சில சமயங்களில் மணியாச்சி வந்தும் கூட கிராசிங் என்ற பெயரில் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. பின்னர் இரவு 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் நெல்லை வந்து சேருகிறது. இதனால் இரவு நேரத்தில் வந்து இறங்கும் பயணிகள் படாதபாடு படுகின்றனர். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் அருகிலுள்ள மேலப்பாளையம், தச்சநல்லூர், டவுன் செல்லும் பயணிகளுக்கு கூட பஸ்கள் கிடைப்பதில்லை. அம்ைப, சேரன்மகாதேவி, தென்காசி செல்லும் பயணிகள் ரயில் நிலையத்திலே காத்திருக்கின்றனர். எனவே ஈரோடு- நெல்லை பயணிகள் ரயிலை விரைந்து நெல்லைக்கு வருமாறு இயக்கிட வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.

பாலருவி எக்ஸ்பிரசிற்கு இணைப்பு

ஈரோடு - நெல்லை பாசஞ்சர் ரயில் கடந்தாண்டு வரை இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்து சேர்ந்தது. அந்த ரயிலில் இருந்து இறங்கும் பயணிகள் விரைந்து ஊர்களுக்கு செல்ல பஸ்களை பிடிப்பது வழக்கமாக இருந்தது. மீண்டும் அதே 10.30 மணிக்கு ஈரோடு ரயில் நெல்லை வந்து சேர்ந்தால் நெல்லை மாவட்ட பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் நெல்லையில் இருந்து பாலக்காட்டிற்கு இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் தற்போது புதிய கால அட்டவணைப்படி 10.30 மணிக்கு பதிலாக 10.45 மணிக்கு கிளம்புகிறது. ஈரோடு, மதுரையில் இருந்து வரும் பயணிகள் பாலருவி எக்ஸ்பிரசை பிடித்து சேரன்மகாதேவி, அம்பை, தென்காசி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் வழிபிறக்கும்.

Related Stories: