காரையாறு சொரிமுத்தய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா இன்று கால்நாட்டுடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு

வி.கே.புரம்: காரையாறு சொரிமுத்தய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா இன்று (17ம் தேதி) கால்நாட்டுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம் காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்தய்யனார் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. அகத்தியருக்கு இறைவன் திருக்காட்சி அளித்ததும், சாஸ்தா தனது பரிவாரங்களுடன் சிவபூஜை செய்த இடமும் இதுவென்பதால் குலதெய்வம் தெரியாதவர்களுக்கும் இதுவே தலைமை பீடமாக கருதப்பட்டு வழிபடப்படுகிறது. இதுதவிர தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோருக்கு இக்கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களே குலதெய்வங்களாக விளங்குவதால் இங்கு நடைபெறும் ஆடி அமாவாசை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இவ்விழாவில் தென்மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கானோர் திரண்டு வழிபட்டுச் செல்வர். பலர் ஒரு வாரத்திற்கு முன்பே கோயில் அமைந்துள்ள வனப்பகுதியில் குடில் அமைத்து தங்கியிருந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவர். திருவிழாவிற்காக பாபநாசம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்தாண்டு காரையாறு சொரிமுத்தய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா இன்று காலை 10.30 மணிக்கு கால்நாட்டுடன் தொடங்கியது. இதில் சிங்கம்பட்டி ராஜா முருகதாஸ் தீர்த்தபதி, உதவியாளர் கிட்டு, தலைமை கணக்கர் செங்கொடி, கணக்காளர் ராட்சமுத்து உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மகாலிங்கசுவாமி, சொரிமுத்தய்யனார், சங்கிலி பூதத்தாளர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முக்கிய திருவிழவான ஆடி அமாவாசை திருவிழா வரும் 30ம்தேதி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி மற்றும் நிர்வாக அதிகாரி வெங்டேஸ்வரன் செய்து வருகின்றனர். திருவிழாவையொட்டி சிறப்பு பஸ்கள் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: