பாகிஸ்தான் சுரங்கத்தில் தீ 8 தொழிலாளர் பரிதாப பலி: மூன்று பேர் உயிருடன் மீட்பு

கராச்சி: பாகிஸ்தானில் நடந்த நிலக்கரி சுரங்க தீ விபத்தில் சிக்கிய மூன்று தொழிலாளர்கள் உயிருடனும், 8 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குயெட்டாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மின் கசிவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், சுரங்கத்தின் உட்பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 11 பேர் சிக்கிக் கொண்டனர். மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், சுரங்கத்தில் உளள விஷவாயு கசிந்ததால் மீட்புக் குழுவை சேர்ந்த இருவர் மயக்கம் அடைந்தனர். இதனால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

Advertising
Advertising

இந்நிலையில், கடந்த 2 நாட்களில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 8 பேர் சடலங்கமாக கிடைத்துள்ளனர். இது தொடர்பாக பலுசிஸ்தான் மாநில பேரிடர் மேலாண்மை குழு அதிகாரி இம்ரான்கான் கூறுகையில், ``கடந்த திங்கட்கிழமை ஒருவரும், நேற்று இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் மிகவும் ஆபத்தான நிலையில்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்,’’ என்றார். பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாய், சவ்ரன்ஜ், துக்கி, மாச் பகுதிகளில் அதிகளவு சுரங்கங்கள் செயல்படுகின்றன. அங்கு ஏற்படும் விபத்துகளில் அதிகளவில் உயிரிழப்புகள் நடக்கின்றன. ஆனால், அந்த தகவல்கள் மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

Related Stories: